சென்னை மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 46 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையின் உயிர்நாடியாய் விளங்கும் மெட்ரோ

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்பட்டது. அதன்பின்னர் 2016ம் ஆண்டு சென்னை விமான நிலையம் சின்னமலை வரையும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 3வதாக 2017ல் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சேவை விரிவடைந்தது. தொடர்ந்து 2018ல் சென்னை சென்ட்ரல் வரை சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்பின்னர் 2018ல் சின்னமலை முதல் ஏஜி டிஎம்எஸ் வரையும், அதன்பின்னர் 2019ல் வண்ணாரப்பேட்டை வரையும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

46 கோடி பேர் பயணம்

இந்த நிலையில், “2015ம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 31 வரை சென்னை மெட்ரோ ரயிலில் 46.73 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 11.19 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் சென்னை மக்களின் உயிர்நாடியாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மக்கள் மெட்ரோ ரயில்களை நாடுவது அதிகரித்துள்ளது. 2015 முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 2.80 கோடி பயணிகள் பயணம் செய்தனர். அதன்பின்னர் ஜனவரி 1, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை 3.28 கோடி பயணிகள் பயணம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு

ஜனவரி 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை 1,18,56,982 பயணிகள் பயணம் செய்தனர். இதில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை சேவை நிறுத்தப்பட்டது. அதேபோல் ஜனவரி 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை 2.53 கோடி பயணிகள் பயணம் செய்தனர். இதில், கொரோனா தொற்று ஊரடங்கால் மே 2021 - ஜூன் 2021 வரை சேவை நிறுத்தப்பட்டது.

கடைசி 3 ஆண்டுகள் நிலவரம்

ஜனவரி 1, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை 6.09 கோடி பயணிகள் பயணம் செய்தனர். தொடர்ந்து ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை 9.11 கோடி பயணிகள் பயணம் செய்தனர்.

ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை 10.52 கோடி பயணிகள் பயணம் செய்தனர். மேலும் ஜனவரி 1, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை 11.19 கோடி பயணிகள் பயணம் செய்தனர். இதுவரை, ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை மொத்தம் 46.73 கோடி பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

NCMC கார்டு போன்ற டிக்கெட் சேவைகள் மற்றும் Whatsapp போன்ற அனைத்து டிஜிட்டல் QR டிக்கெட்டுகள் - (+91 83000 86000), Paytm, PhonePe மற்றும் CMRL மொபைல் செயலியில் பிரத்தியேகமாகக் கிடைக்கும் டிஜிட்டல் ஸ்டோர் மதிப்பு பாஸ் ஆகியவற்றில் CMRL 20% தள்ளுபடியை வழங்குகிறது. பொதுப் போக்குவரத்தில் சென்னை மெட்ரோவை தங்கள் உயிர்நாடியாக ஏற்றுக்கொண்டதற்கும், மெட்ரோ ரயில்கள், நிலையங்களைப் பராமரிப்பதில் ஒத்துழைத்ததற்கும் மெட்ரோ நிர்வாகம் அனைத்து பயணிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.