சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் அலுவலகத்திற்கு சென்று வரவே பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. எனவே சென்னை போன்ற பெரிய நகரங்களில் கேட்கவா வேண்டும், இதற்கு தீர்வாகத்தான் சென்னையில் முக்கிய இடங்களில் மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்

இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ஐடி ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றும் பகுதியாக உள்ள பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு விரைவில் தொடங்கப்படவுள்ளது.மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடமான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை

இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி,

பிரேக்கிங் தொழிநுட்பம், பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் மெட்ரோ தொடங்க முடியும் என்ற நிலையில் மூன்று மாதங்கள் ஆகியும் சான்றிதழ் வழங்காமல் இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு காலம் தாழ்த்தி வந்த நிலையில் விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விரைவில் மெட்ரோ ரயில் சேவை

பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் இறுதி கட்ட சோதனை நடைபெற்ற பின்பு அனைத்து பணிகளையும் நிறைவு செய்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அரசாங்கத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்து விடும். இதனை தொடர்ந்து விரைவில் பூந்தமல்லி போரூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.