தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ சார்பில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களின்‌ உணவுத்‌ திருவிழா சென்னை, மெரினா கடற்கரையில்‌ இன்று தொடங்கியுள்ளது. டிசம்பர் 24 வரை இந்தத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி இலவசம் ஆகும்.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ வழிகாட்டுதலில்‌ செயல்படும்‌ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்‌ சார்பில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத்‌ தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

எதற்காக இந்த உணவுத் திருவிழா?

சுய உதவிக்‌ குழுக்கள்‌ மூலம்‌ தயாரிக்கப்படும்‌ தரமான உணவுகள்‌, முன்னணி உணவகங்களின்‌ உணவு வகைகளின்‌ தரத்திற்கு சற்றும்‌ குறைவில்லாமல்‌ அவற்றிற்கு இணையாக சுவையும்‌. தரமும்‌ நிறைந்த உணவுகளை முறையான பயிற்சி பெற்று சுகாதாரமான முறையில்‌ தயாரித்து விற்பனை செய்து வருவதால்‌, சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ உணவுப்‌ பொருட்களை அனைவரும்‌ அறிந்திட வேண்டும்‌ என்ற நோக்கத்துடனும்‌. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்‌ சார்பில்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ உணவுப்‌ பொருட்களின்‌ உணவுத்‌ திருவிழா, 20.12.2024 முதல்‌ 24.12.2024 வரை சென்னை, மெரினா கடற்கரையில்‌ நடைபெறுகிறது.

துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களின்‌ உணவுத்‌ திருவிழாவை துவக்கி வைத்தார்.

உணவு வகைகள் என்ன?

கோவை கொங்கு மட்டன்‌ பிரியாணி,

கிருஷ்ணகிரி நோ ஆயில்‌ நோ பாயில்‌,

களூர்‌ தோல்‌ ரொட்டி - மட்டன்‌ கிரேவி,

நாமக்கல்‌ பள்ளிப்பாளையம்‌ சிக்கன்‌,

தருமபுரி ரவா கஜூர்‌,

நீலகிரி ராகி களி - அவரை குழம்பு,

திருப்பூர்‌ முட்டை ஊத்தாப்பம்‌,

காஞ்சிபுரம்‌ கோவில்‌ இட்லி,

சிவகங்கை மட்டன்‌ உப்புக்கறி,

புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,

ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி,

வேலூர்‌ ராகி கொழுக்கட்டை,

மதுரை கறி தோசை,

விருதுநகர்‌ கரண்டி ஆம்லெட்‌,

தஞ்சாவூர்‌ பருப்பு உருண்டை குழம்பு,

திருச்சி நவதானிய புட்டு,

மயிலாடுதுறை இறால்‌ வடை,

நாகப்பட்டிணம்‌ மசாலா பணியாரம்‌,

கன்னியாகுமரி பழம்‌ பொறி,

சென்னை தயிர்‌ பூரி உள்ளிட்ட 100க்கும்‌ மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.

65 சுய உதவிக்‌ குழுக்களைச்‌ சேர்ந்த 150க்கும்‌ மேற்பட்ட மகளிர்‌ உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில்‌ பரிமாறும்‌ வகையில்‌ 35 அரங்குகள்‌அமைக்கப்பட்டுள்ளன.

67 வகையான ரெடி டூ ஈட் உணவுப்பொருட்கள்

உடனடியாக சமைப்பதற்கும்‌ மற்றும்‌ உண்ணுவதற்கும்‌ ஏற்ற உணவு வகைகளான அரியலூர்‌ வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய்‌ லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட்‌ மால்ட்‌ பொடி, கடலூர்‌ சங்குப்பூ சர்பத்‌, தருமபுரி குதிரைவாலி ரோஸ்‌ லட்டு, திண்டுக்கல்‌ காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர்‌ பால்கோவா, காஞ்சிபுரம்‌ முட்டை மிட்டாய்‌, சேலம்‌ ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர்‌ பாசிப்பருப்பு உருண்டை, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, மதுரை தொத்தல்‌, நாகப்பட்டிணம்‌ சுண்டைக்காய்‌ வத்தல்‌, நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, ராமநாதபுரம்‌ லோத்தல்‌, தென்காசி தேன்‌ நெல்லி, திருநெல்வேலி அல்வா. தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி, திருச்சி மணப்பாறை முறுக்கு, திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 67 வகையான தயார்‌ நிலை உணவுப்‌ பொருட்களை விற்பனை செய்திட 6அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மேலும்‌ பல்வேறு மாவட்டங்களைச்‌ சேர்ந்த சுய உதவிக்‌ குழுக்கள்‌ உற்பத்தி செய்த கைவினைப்‌ பொருட்கள்‌ உள்ளிட்ட 45 வகையான பொருட்கள்‌ 3 அரங்குகளில்‌ விற்பனை செய்யப்பட உள்ளன.

திருவிழா எப்போது?

துவக்க நாளான இன்று (20.12.2024) மட்டும்‌ மாலை 04.00 மணி முதல்‌ இரவு 08.30 மணி நடைபெறும்‌ உணவுத்‌ திருவிழா. 21.12.2024 முதல்‌ 24.12.2024 வரை மதியம்‌ 12.30 மணி முதல்‌ இரவு 08.30 மணி வரை நடைபெபறும்‌.

இலவச பார்க்கிங் வசதி

உணவுத்‌ திருவிழாவிற்கு வருகை தரும்‌ பொதுமக்கள்‌, லேடி விலிங்டன்‌ கல்லூரி, சென்னைப்‌ பல்கலைக்‌ கழகம்‌ மற்றும்‌ ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின்‌ வளாகங்களில்‌ இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.