கடலூர்: கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சன தரிசனமும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று காலை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3-ந்தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜப் பெருமானின் தரிசனத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழ்வை முன்னிட்டு ஜனவரி 3-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்ய பிப்ரவரி 14-ந்தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா தரிசனம்

சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும் .இதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள் .மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனகசபை ,மதுரை வெள்ளி சபை ,திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியவை போற்றப்படுகிறது. இங்கு மிக விமர்சையாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது .இந்த ஆண்டு ஜனவரி 13- 2025 திங்கள் கிழமை நடைபெற உள்ளது. மேலும் அன்று போகி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் உருவான கதை:

சிவ பெருமானின் பக்தர்களான பதஞ்சலி முனிவரும், வியாக்கர பாத முனிவரும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண அவரை நோக்கி வேண்டி கொள்கிறார்கள். அதன்படி சிவ பெருமானும் தில்லையிலேயே தாண்டவம் ஆடினார் என கூறப்படுகிறது .சிவபெருமான் ஆடிய அந்த நாள்தான் மார்கழி திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஆகும் . அதனால் தான் மார்கழி ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த தரிசனத்தை காணும் போது வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.