2025- 26ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 2 முறை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஒரு முறையும் மே மாதத்தில் 2ஆவது முறையும் தேர்வு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துத் தெரிவிப்பது எப்படி?

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdT9UdeTML01fjWbSFPJyHyY5BOUWyPsIItqeVnZROkEEljyQ/viewform?pli=1 என்ற இணைப்பை க்ளிக் செய்து, கூகுள் படிவத்தைப் பெறலாம்.

அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

வரைவு அறிக்கை சொல்வது என்ன?

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 2026ஆம் ஆண்டு 26.6 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

முழுமையான பாடத் திட்டமும் பாடப் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அனைத்து நேர அட்டவணையும் முடிவு செய்யப்பட்டது எனவும் அதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளுக்குமான கட்டணம் முன்பாகவே வசூலிக்கப்பட்டு விடும் எனவும் அது திருப்பித் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விடுமுறை நாளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படாது என்றும் வரையறுக்கப்பட்ட நாட்களிலும் மாநில விடுமுறை நாட்களிலும் கூட தேர்வுகள் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி?

முதல் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் 11ஆம் வகுப்பில் அனுமதிக்கப்படுவர். எனினும் 2ஆவது தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இம்ப்ரூவ்மெண்ட் பிரிவில் வைக்கப்படுவர். பிறகு இரண்டாவது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

https://www.cbse.gov.in/cbsenew/documents/SCHEME_BOARD_EXAMS_POLICY_25022025.pdf என்ற இணைப்பில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு என்பன உள்ளிட்ட பரிந்துரைகள், வரைவு அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/