பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், உங்கள் காரின் மைலேஜை சில எளிய வழிகள் மூலம் அதிகரிப்பது எப்படி என்று விவரமாகக் காணலாம்.

நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகள் பெரும் பொருளாதார சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கார் வைத்திருப்பவர்கள் மைலேஜ் குறைவால் அதிகப்படியான பணத்தை எரிபொருளுக்காகவே செலவிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உள்ளது.

ஆனால், நம்முடைய அன்றாட ஓட்டுநர் பழக்கவழக்கங்களில் சில சிறிய மாற்றங்களைச் செய்தாலே காரின் மைலேஜை கணிசமாக அதிகரிக்க முடியும் என வாகன நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான சில எளிய மற்றும் மிகவும் பயனுள்ள குறிப்புகளை இங்கே நாம் விரிவாகக் காண்போம்.

காற்றழுத்தத்தை உறுதி செய்க

முதலாவதாக, காரின் டயர்களில் சரியான அளவு காற்றழுத்தம் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். டயர்களில் காற்று குறைவாக இருந்தால் இன்ஜினுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும். எனவே வாரம் ஒருமுறையாவது டயர் காற்றழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

சீரான வேகம் முக்கியம்

அடுத்ததாக, காரை எப்போதும் சீரான வேகத்தில் ஓட்டுவது சிறப்பான மைலேஜை தரும். நெடுஞ்சாலைகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பது எரிபொருள் பயன்பாட்டை பெருமளவு குறைக்கும். அடிக்கடி திடீரென பிரேக் பிடிப்பதையும், வேகமாக ஆக்சிலரேட்டர் கொடுப்பதையும் நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற முரட்டுத்தனமான ஓட்டுநர் முறை காரின் மைலேஜை கடுமையாக பாதிக்கும்.

ஏசி பயன்பாடு எப்படி?

கார் ஏசியின் பயன்பாடும் மைலேஜில் முக்கிய பங்கு வகிக்கிறது. மிதமான தட்பவெப்ப நிலை இருக்கும் போது ஏசியை அணைத்துவிட்டு கண்ணாடிகளை சற்றே இறக்கி வைத்து பயணிக்கலாம். ஆனால் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும் போது கண்ணாடிகளை திறந்து வைத்தால் காற்றின் கடுமையான எதிர்ப்பால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதை வாகன ஓட்டிகள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.

சர்வீஸ் முக்கியம் பிகிலு

காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரித்து சர்வீஸ் செய்வது மிக முக்கியம். இன்ஜின் ஆயில், ஸ்பார்க் பிளக் மற்றும் ஏர் ஃபில்டர்களை சரியான நேரத்தில் மாற்றுவதன் மூலம் இன்ஜினின் செயல்திறன் எந்த தடங்கலும் இன்றி சிறப்படைந்து மைலேஜ் மேம்படும். தேவையற்ற கனமான பொருட்களை காரின் டிக்கியில் ஏற்றிச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கூடுதல் எடை எரிபொருள் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்.

வேறு என்ன செய்ய வேண்டும்?

மேலும் போக்குவரத்து நெரிசல் அல்லது டிராபிக் சிக்னல்களில் ஒரு நிமிடத்திற்கு மேல் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தால் காரின் இன்ஜினை உடனடியாக அணைத்து விடுவது எரிபொருளை மிச்சப்படுத்தும் மிகச் சிறந்த வழியாகும்.

இந்த எளிய நடைமுறை வழிமுறைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து முறையாக பின்பற்றி வந்தாலே, உங்களது சொந்த கார் சிறப்பான மைலேஜை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இன்ஜினின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.

இதன் மூலம் தினசரி ஏற்படும் அதிகப்படியான எரிபொருள் செலவை பெருமளவு குறைத்து உங்கள் பணத்தை உங்களால் மிகவும் எளிதாக சேமிக்க முடியும் என நாட்டின் முன்னணி வாகனத் துறை வல்லுநர்கள் திட்டவட்டமாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துகின்றனர்.