Burj al Arab: துபாயில் உள்ள புர்ஜ் அல் அரப் எனப்படும் சொகுசு ஹோட்டலில் உள்ள, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

புர்ஜ் அல் அரப் நட்சத்திர ஹோட்டல்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாயில் உள்ள புர்ஜ் அல் அரப் உலகின் மிக ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் ஏழு நட்சத்திர ஹோட்டல் என்று குறிப்பிடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் டாம் ரையின் கற்பனையில் இருந்து புர்ஜ் அல் அரபு பிறந்தது. 6 ஆண்டுகால கட்டுமான பணிகளுக்குப் பிறகு 1999ம் ஆண்டு, இந்த பிரமாண்ட ஹோட்டல் திறக்கப்பட்டது. ஜுமைரா குழுமத்தால் இந்த ஹோட்டல் நிர்வகிக்கப்படுகிறது.

வடிவமைப்பு விவரங்கள்:

அரேபிய ஆடம்பர விருந்தோம்பலை உயர்த்த விரும்பும் பலருக்கு இந்த ஹோட்டல் அளவுகோலாக இருந்து வருகிறது. இந்த ஹோட்டல் பயன்பாட்டிற்கு வந்தபோது, துபாயில் மட்டுமின்றி உலகளவில் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றாக இருந்தது. அதன்படி, இந்த ஹோட்டல் கட்டடம் 321 மீ உயரம் (ஈபிள் கோபுரத்தை விட 14 மீ உயரம் மற்றும் NYC இல் உள்ள எம்பயர் ஸ்டேட்டை விட 60 மீட்டர் மட்டுமே குறைவாக உள்ளது) கொண்டுள்ளது. கடலுக்குள் 148 அடி வரை இந்த கட்டடம் நீண்டுள்ளது. தோராயமாக 1,790 சதுர மீட்டர் பரப்பளவில் 24 காரட் தங்க இலைகள் ஹோட்டலின் உட்புறங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டன. ஹோட்டலில் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஸ்டேட்யூரியோ மார்பிள், சுவர்கள் மற்றும் தரையமைப்புகள் உள்ளன. இத்தாலிய கலைஞரான மைக்கேலேஞ்சலோ, தனது மிகவும் பிரபலமான பல சிற்பங்களை உருவாக்க பயன்படுத்தியது இதே பளிங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் அல் அரப் ஹோட்டலில் உள்ள வசதிகள் என்ன?

விருந்தோம்பலில் புதிய உயரங்களை எட்டியிருக்கும், புர்ஜ் அல் அரப் ஹோட்டல் பயனாளர்கள் எந்தவித குறையையும் சொல்லாமல் இருக்க தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சூட்-ஒன்லி ஹோட்டலில் பல்வேறு வகையான அறைகள் உள்ளன. அந்த பட்டியல் டீலக்ஸ் படுக்கையறையில் தொடங்கி, சுழலும் படுக்கையுடன் கூடிய ராயல் சூட் வரை நீளும். சுகமான இரவு தூக்கத்தை உறுதி செய்யும் வகையில், ஹோட்டலில் விருந்தினர்கள் தேர்வு செய்ய 17 வகையான தலையணைகளுடன் அதன் சொந்த 'தலையணை மெனு' உள்ளது. டூவெட்டுகள் ஐஸ்லாண்டிக் வாத்து இறகுகளால் நிரப்பப்பட்டுள்ளன. ஹாலந்து, கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்கள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டலில் அதன் சொந்த ஹெலிபேட் உள்ளது

இந்த ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலிருந்தும் கடலின் ரம்மியமான காட்சியைப் அங்களால் அனுபவிக்க முடியும். நீச்சல் குளம், ஸ்பா, உடற்பயிற்சி மையம், உணவகம் மற்றும் பார் போன்ற பல உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் இங்கு கிடைக்கும். புர்ஜ் அல் அரப் ஹோட்டல், உலகின் மிக விலையுயர்ந்த காக்டெய்லை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டில் ஹோட்டல் மற்றொரு உலக சாதனையைப் பெற்றது. அந்த காக்டெயிலின் விலை இன்றைய தேதிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.24 லட்சமாகும்.

ஒரு நாளுக்கான வாடகை எவ்வளவு?

புர்ஜ் அல் அரப் நட்சத்திர ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கே, குறைந்தபட்சம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் செலவிட வேண்டும். அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மதிய வேளையில் ஸ்கைவியூ பாரில் வழங்கப்படும் தேநீர் மிகவும் பிரபலமாகும். இந்திய மதிப்பில் அதன் விலை 13 ஆயிரத்து 500 ரூபாயாகும். அதேநேரம், லட்சங்களை செலவிட்டு இந்த ஹோட்டலில் தங்க முடியாதவர்களுக்கு என ஒரு பிரத்யேக ஆப்ஷனும் உள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாயை செலுத்தினால், 90 நிமிடங்கள் அந்த ஹோட்டலுக்குள் சென்று சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.