பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று அமைய உள்ளது. தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு புதிய அரசை பாஜக அமைக்க உள்ளது.

மத்திய அமைச்சரவை பட்டியல்: தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் புதிய அரசு அமையவிருப்பதை உலகமே உற்று நோக்கி கவனித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்த நிலையில், அதற்கு விடை கிடைத்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சரவையில் இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு புது தேசிய தலைவரா? அதேபோல, பாஜக தேசிய தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவுக்கு மோடி அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில், மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜெ.பி. நட்டா.

2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு, பாஜக தேசிய தலைவராக பதவி வகித்து வந்த அமித் ஷா, மோடி அமைச்சரவையில் சேர்ந்த பிறகு, நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைய இருந்தது.

ஆனால், மக்களவை தேர்தலை காரணம் காட்டி அவரின் பதவிக்காலம் தேர்தல் முடியும் வரை நீட்டிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நட்டா, இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்.

நட்டாவுக்கு அமைச்சரவையில் இடம் தரும் பட்சத்தில், பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, பாஜக தேசிய தலைவராக ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகித்தார்.

அதற்கு பிறகு, தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் கூட பாஜகவின் தேசிய தலைவர் பதவியில் இருந்ததில்லை. எனவே, இந்த முறை தென்னிந்தியர் ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.