விலைவாசி உயர்வால், தமிழக அரசிடம், ஆட்டோ மீட்டர் கட்டணங்களை மாற்றி அமைக்குமாறு, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது தாங்களாகவே கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

11 வருடங்களாக மாற்றப்படாத ஆட்டோ கட்டணங்கள்

முன்னதாக, 2013-ம் ஆண்டே ஆட்டோ மீட்டர்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன்படி, 1.8 கி.மீ., தூரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணமாக ஐந்து நிமிடங்களுக்கு 3.50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதோடு, இரவு நேரங்களில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கவும் அனுமதி இருந்தது. தற்போது வரை இந்த கட்டணங்களே நடைமுறையில் உள்ளன.

அரசிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

ஒருபுறம், 11 வருடங்களாக ஆட்டோ மீட்டர் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில், மறுபுறம் விலைவாசி கூடிக்கொண்டே இருக்கிறது. வாகனங்களின் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஆர்.டி.ஓ கட்டண உயர்வு, வீட்டு வாடகை, மளிகை பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பழைய கட்டணங்கள் கட்டுப்படியாகவில்லை எனவும், அதனால், அரசு ஆட்டோ மீட்டர் கட்டணங்களை மாற்றி அமைத்துத்தர வேண்டும் எனவும், ஆட்டோ ஓட்டுநர்க சங்கங்களின் கூட்டமைப்பு, பல வருடங்களாகவே கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

உரிமை குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை

இந்த நிலையில், உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள், கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும், போக்குவரத்துத்துறை ஆணையர், உள்துறை மற்றும் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை கட்டணத்தை மாற்றி அமைத்துத் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தாங்களே கட்டணங்களை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்டோ கட்டண விவரங்கள்

இந்த அறிக்கையின்படி, பிப்ரவரி 1-ம் தேதி முதல், ஆட்டோ சவாரிக்கு புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.8 கி.மீ., தூரத்திற்கு 50 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு தலா 18 ரூபாய், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு 1.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணிவரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ள நிலையில், இதனை அரசு ஏற்றுக்கொள்ளுமா, அல்லது புதிய கட்டண விவரங்களை அரசே வெளியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க: CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்