அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு வெனிசுலா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்களும், ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பசிபிக், கரீபியன் கடலில் கப்பல்களை தாக்கும் அமெரிக்கா

வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அதோடு நிற்காமல், பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்திற்குரிய படகுகள் மீது தாக்குதலையும் அமெரிக்கா நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் வெனிசுலா

ஆனால், போதை கடத்தல் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். மேலும், அமெரிக்கா தாக்கிய கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க படைகள் தயார் நிலை

இந்த சூழலில், கரீபியன் கடல் பகுதியில், போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. மேலும், 15 ஆயிரம் ராணுவ துருப்புக்களையும் குவித்துள்ளது. அங்குள்ள போர்டோரிகோ தீவில், மூடப்பட்ட விமான தளம் ஒன்றை அமெரிக்கா மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. எஃப்-35 ரக போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்களும் வந்து இறங்கியுள்ளன.

அதோடு, உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான 'யு.எஸ்.எஸ்., ஜெரால்டு ஃபோர்டு' ஒரு குழுவுடன் கரீபியன் கடல் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் அமெரிக்கா பெயர் சூட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், வெனிசுலாவில் சிறப்பு அவசர நிலையை அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். மேலும், நிலம், கடல், வான்வெளிகளின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு படைகளும் தயார் நிலையில் உள்ளன.

வெனிசுலா மீது தாக்குதலா.? என்ன சொல்கிறார் டிரம்ப்.?

இப்படிப்பட்ட சூழலில், வெனிசுலா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தான் முடிவு எடுத்து விட்டதாகவும், ஆனால், அது எந்த விதமான நடவடிக்கை என்பதை தற்போது கூற முடியாது என்றும், விரைவில் அது பற்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனிடையே, கரீபியன் கடலில் அமெரிக்க ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபடுவது ஒரு பொறுப்பற்ற செயல் என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ விமர்சித்துள்ளார்.