ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்காக போராடி வருகின்றனர். இந்த தொடரில் தொடக்கத்தில் மோசமாக தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தற்போது ஒவ்வொரு அணிக்கும் அச்சுறுத்தலான அணியாக உருவெடுத்து வருகிறது.

அபிஷேக்கின் அனல் பறக்கும் ஆட்டம்:

இன்று ஹைதரபாத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் - டெல்லி அணிகள் மோதி வருகிறது. கடந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா இந்த போட்டியில் டெல்லியை வதம் செய்துவிட்டார் என்றே கூறலாம். டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆட்டத்தை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணிக்காக அபிஷேக் சர்மா அதிரடியாகவே தொடங்கினார். அவரது அதிரடி டெல்லி பந்துவீச்சாளர்களை திணறவைத்தது. முகேஷ்குமார், நிதிஷ் ராணா, கேப்டன் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், நிகிடி, நடராஜ் என யார் வீசினாலும் அவர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

2வது சதம்:

அவரது அதிரடியால் அவரது ஸ்கோரும், சன்ரைசர்ஸ் ரன்களும் ஜெட் வேகத்தில் ஏறியது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசியது மட்டுமின்றி 47 பந்துகளில் சதமும் விளாசினார். ஐபிஎல் தொடரில் அவருக்கு இது 2வது சதம் ஆகும். அபிஷேக் சர்மாவின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 15வது ஓவரிலே 185 ரன்களை எட்டியது.

கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த அணி சன்ரசைர்ஸ். ஐபிஎல் தொடரில் அதிக ரன் (287) என்ற வரலாற்றை தன்வசம் வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி தற்போது ஆடும் விதம் மீண்டும் அதுபோன்ற ரன் வரலாறை படைக்கும் விதத்தில் ஆடி வருகின்றனர்.

சன்ரைசர்சுக்கு பலம்:

அபிஷேக் சர்மா சரியான தருணத்தில் ஃபார்முக்கு வந்திருப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. 25 வயதான அபிஷேக் சர்மா இதுவரை 84 போட்டிகளில் ஆடி 2120 ரன்களை விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகள் 1250 ஆகும். அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்துள்ளார். 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 197 பவுண்டரிகள் 128 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 11 அரைசதங்கள், 2 சதங்கள் விளாசியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய டெல்லி அணியின் பந்துவீச்சை சன்ரைசர்ஸ் அணி இன்று சிதைத்துவிட்டது என்றே கூறலாம். அபிஷேக் சர்மாவின் அபாரமான பேட்டிங்கால் ஹைதரபாத் அணி மீண்டும் 200 ரன்களை கடந்துள்ளது.