ஆவின் நெய் விலை உயர்வு

தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது. நெய்யின் விலையை அரை கிலோவுக்கு ரூ.20, கிலோவுக்கு ரூ.40, 5 கிலோவுக்கு ரூ.350, 15 கிலோவுக்கு ரூ.1155 வீதம் நேற்று முதல் உயர்த்தியுள்ளது. அதேபோல், ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் முறையாக உயர்த்தியிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் முதல் நெய், பன்னீர் ஆகிய பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடி இப்போது திரும்பப் பெறப்பட்டிருப்பதன் மூலம் தான் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது.

நெய்க்கு ஜிஎஸ்டி குறைப்பு

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. அதன்படி குஜராத் அமுல், கர்நாடகம் நந்தினி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பால் பொருள்களின் விலையை குறைத்த நிலையில், ஆவின் மட்டும் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தவில்லை. ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை அரசு குறைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினேன். அதன் பிறகு தான் திமுக அரசு தள்ளுபடி வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியது.

மக்களை ஏமாற்றும் தமிழக அரசு- அன்புமணி

ஜி.எஸ்.டி வரிவிகிதக் குறைப்பின் அடிப்படையில் எந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டுமோ, அதே தொகையை நெய்யுக்கும், பன்னீருக்கும் மட்டும் நவம்பர் 30&ஆம் தேதி வரை தள்ளுபடியாக வழங்குவதாக ஆவின் அறிவித்தது. அதுவும் கூட பிற பால் பொருள்களுக்கு வழங்கப்படவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கையும் மக்களை ஏமாற்றும் நாடகம் தான் என்று விமர்சித்திருந்த நான்,‘‘நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் போது, டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்’’ என்று குற்றஞ்சாட்டியிருந்தேன். இரு மாதங்களுக்கு முன் நான் என்ன கூறியிருந்தேனோ, அது தான் இப்போது நடந்திருக்கிறது. திமுக முகமூடி கிழிந்திருக்கிறது.

5வது முறையாக உயர்ந்த விலை

நெய்யுக்கும், பன்னீருக்கும் வழங்கி வந்த தள்ளுபடியை திமுக அரசு திரும்பப் பெற்றிருப்பதன் மூலம் ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு முன் நெய், பன்னீர் ஆகியவை என்ன விலைக்கு விற்கப்பட்டனவோ, அதே விலை மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் திருட்டுத்தனங்களை செய்து திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை 2023 ஆம் ஆண்டுக்குள் ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆக உயர்ந்தது. இப்போது ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டிய 40 ரூபாயை வழங்காமல் இருப்பதன் மூலம் ஆவின் நெய் விலை 5 கட்டங்களாக ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது. இது 44% உயர்வு ஆகும். மனசாட்சி உள்ள எந்த அரசும் இந்த அளவுக்கு பால்பொருள் விலையை உயர்த்தாது. எனவே ஆவின் நெய் விலையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் அளிக்கும் தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.