மருத்துவக் கல்லூரிகளில் மோசமான கட்டமைப்பு வசதிகள்: FAIMA ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
இந்திய மருத்துவக் கல்வி அமைப்பில் நிலவும் குறைபாடுகளை வெளிப்படுத்தும் வகையில், அகில இந்திய மருத்துவ சங்கம் (FAIMA) நடத்திய நாடு தழுவிய ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில் சுமார் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு, பணிச் சுமை மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான மனநல ஆதரவு இல்லாதது போன்ற சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

எங்கெங்கே ஆய்வுகள்?

AIIMS, PGIMER மற்றும் JIPMER போன்ற முக்கிய மத்தியக் கல்வி நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களில், 90.4% அரசுக் கல்லூரிகளையும், 7.8% தனியார் கல்லூரிகளையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோசமான உள்கட்டமைப்பு வசதி

FAIMA - RMS ஆய்வின்படி, 89.4% கல்லூரிகளில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாகவும், 73.9% பயிற்சி மருத்துவர்கள் அதிகப்படியான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவதாகவும், 40.8% பேர் தங்கள் பணிச்சூழல் மிகவும் மோசமாக (toxic) இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

71.5% பேர் போதுமான நோயாளர் சிகிச்சை வெளிப்பாடு பெறுவதாகக் கூறினாலும், 54.3% பேர் மட்டுமே வழக்கமான கற்பித்தல் அமர்வுகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 68.9% பேர் ஆய்வக மற்றும் உபகரண வசதிகள் தேவைகளை பூர்த்தி செய்வதாக உணர்ந்தாலும், சரியான நேரத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் பாதி பேர் மட்டுமே. 29.5% பேர் மட்டுமே நிலையான வேலை நேரம் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆள் பற்றாக்குறை

55.2% மருத்துவ ஊழியர்கள் ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், இது கல்வியின் தரத்தை நேரடியாக பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் அதிக நோயாளர் வெளிப்பாடு கிடைத்தாலும், அதிக நிர்வாகப் பணிச்சுமை இருப்பதாகவும், தனியார் கல்லூரிகள் கற்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் சிறப்பாக செயல்படுவதாகவும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

மருத்துவ மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளுக்கு இந்த கட்டமைப்பு சிக்கல்களே காரணம் என்று FAIMA சுட்டிக்காட்டியுள்ளது. 2024 தேசிய பணிக்குழுவின் பரிந்துரைகளான நிலையான வேலை நேரம், மனநல ஆலோசகர் நியமனம் போன்ற பல பரிந்துரைகள் ஒரு வருடம் கடந்தும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் FAIMA குறிப்பிட்டுள்ளது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரிக்கை

"இந்த அறிக்கையை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் மருத்துவக் கல்வி வலையமைப்பை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றுவதே எங்கள் நோக்கம்," என்று FAIMA தலைவர் மருத்துவர் அக்ஷய் டோங்கர்டிவ் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தலையிட்டு இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் FAIMA வலியுறுத்தியுள்ளது.