கோவை ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பெட்டியில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். கடை விளம்பரத்திற்காக, இன்று பிற்பகலில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.

காவல் துறை அபராதம்

உணவகத்தை உரிமையாளர் பாபி சமனூர் போட்டியை தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில் அதிக அளவில் பிரியாணி வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர். இருப்பினும் ஒரு சிலர் இரண்டாவது பிரியாணி முடித்துவிட்டு மூன்றாவது பிரியாணிக்கு சென்றனர். அப்போது சாப்பிட முடியாமல் சிலர் வாந்தி எடுத்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமாக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.

கோவை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்களும் பெண்களும் போட்டியில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தனர். மேலும் இது போன்ற உணவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். உணவகத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் நோ பார்கிங்க் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

வென்றவர்களுக்கு பரிசு

போட்டி குறித்து உணவகத்தின் உரிமையாளர் பாபிச்செம்மனூர் அளித்த பேட்டியில், ”பிரியாணி போட்டியானது ஜாலிக்காக நடத்தி உள்ளோம். போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்றவாறு பரிசும் வழங்கப்படும். போட்டியில் அறிவிக்கப்பட்ட பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசுடன் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

இதுகுறித்து சாப்பிட வந்தவர்கள் கூறுகையில், “சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்தது. இதனால் அதிகமாக உட்கொள்ள முடியவில்லை. பரிசு வெல்லலாம் என போட்டியில் கலந்து கொண்டாலும், உணவை உட்கொள்வது கஷ்டமாக இருந்தது. இப்போட்டியில் வெல்வது கடினம். புதிதாக திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் குறித்த தகவல் மக்களுக்கு எளிதாக சென்றடைய வேண்டும் என்பது தான் இந்த போட்டியின் வியாபார யுக்தி” எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க : Kanchipuram : ”பேட்டரி லைட் வெளிச்சத்தில் படிப்பு” - ஆட்சியர் ஆய்வில் வெளிவந்த காட்சி - காஞ்சியில் நெகிழ்ச்சி..!