இந்தியாவில் சாலை தரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதேபோல, இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அதிகரித்து வருகிறது. அதேசமயம். வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் வருத்தம் தரும் வகையில் நிகழ்ந்து வருகிறது.

4.64 லட்சம் விபத்துகள்:

அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு இந்திய சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களின் விவரம் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 4 லட்சத்து 64 ஆயிரத்து 029 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 100 ஆகும்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது கடந்த 2022ம் ஆண்டு நிகழ்ந்த 1 லட்சத்து 71 ஆயிரத்து 100-ஐ காட்டிலும் அதிகம் ஆகும். மொத்தம் 1.6 சதவீதம் இந்த உயிரிழப்பு அதிகம் ஆகும். கடந்த 2023ம் ஆண்டில் உயிரிழந்தவர்களில் 15.9 சதவீதம் பேர் எஸ்யூவி. கார் மற்றும் ஜீப் வாகனங்களில் சென்றவர்கள். எண்ணிக்கையாக 27 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பாதசாரிகள் மட்டும் 14.3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 776 ஆகும்.

அதிவேகமே காரணம்:

இந்த விபத்துகளில் 58.6 சதவீத விபத்துகளுக்கு அதிவேமாக சென்றதே காரணம் ஆகும். இந்த அதிவேகத்தால் மட்டும் 1 லட்சத்து ஆயிரத்து 841 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், 23.6 சதவீதம் உயிரிழப்புகளுக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணமாக அமைந்துள்ளது. அதாவது, 41 ஆயிரத்து 35 உயிரிழப்புகள் ஓட்டுநரின் அலட்சியத்தால் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டில் இரு சக்கர வாகன விபத்து:

மேலும், கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 45.8 சதவீத சாலை விபத்து மரணங்கள் இரு சக்கர வாகன விபத்தால் அரங்கேறியுள்ளது. அதாவது, இரு சக்கர வாகன விபத்தால் மட்டும் 79 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 14.5 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரு சக்கர வாகன விபத்தில் கடந்த 2023ம் ஆண்டில் 11 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் மட்டும் 10.5 சதவீதம் பேர் அதாவது 8 ஆயிரத்து 370 பேர் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்களில் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் நடக்கிறது. இந்த நேரத்தில் 20.7 சதவீதம் விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு விபத்து நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசத்தில் 12 சதவீதம் விபத்து நடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 10 சதவீதம் விபத்து அரங்கேறியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 9 சதவீதம் விபத்து நடந்துள்ளது. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்திலும் 7 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் 35 சதவீதமும், மாநில நெடுஞ்சாலைகளில் 23 சதவீதமும் நடந்துள்ளது.

விபத்துக்களைத் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், சில ஓட்டுனர்களின் அலட்சியம், வாகனங்களின் குறைபாடு, பாதசாரிகள் சிக்கல் என பல காரணங்களால் இந்த விபத்துக்கள் அரங்கேறுகிறது.