தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரிய வகை கடல்வாழ் உயிரினம் மற்றும் மருத்துவ குணம் கொண்டது என்பதால், சட்டவிரோதமாக பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்துவது தடுக்கப்படுகிறது.

கடல் அட்டைகளுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது, இதனால் இவற்றை சட்டவிரோதமாக பிடித்து கடத்துவது அதிகரித்துள்ளது. கடல் அட்டைகள் ஒரு அரிய வகை கடல்வாழ் உயிரினமாகும், மேலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் கடல் அட்டைகள் மருத்துவ பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதுவும் அவற்றின் கடத்தலுக்கு ஒரு காரணமாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கழுமங்குடா கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்த்குமார் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் பாரதிதாசன், ராக்கேஸ் பெர்நாத் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நீல நிற கேனை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 383 எண்ணிக்கையிலான கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த, கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணுச்சாமி (63) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடைய மருமகனான கார்மேகம் மகன் காளிமுத்து (40) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன உயிரின சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு பேராவூரணி நீதிமன்றத்தில் கண்ணுசாமி ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய காளிமுத்துவை வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.