தஞ்சாவூர்: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மற்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் 22 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் பகுதியில் மீன் பிடி துறைமுகங்கள் உள்ளது. இதில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளது. 2000க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் பாரம்பரிய நாட்டு படகுகள் உள்ளன. கொள்ளுக்காடு. சின்னமனை, மனோரா, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், மரக்காவ லசை,மந்திரிபட்டினம், அண்ணா நகர், புது தெரு, குப்பத்தேவன் உள்ளிட்ட 32 மீனவர் கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மற்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் 22 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல், படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக மீனவர்கள் நிற்கின்றோம். எனவே, இத்தகைய காலங்களில் வருமானம் இல்லாமல் அவதிப்படும் மீனவர்களுக்கு அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இது மீனவர்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். அத்துடன் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீனவர்களுக்கு நிரந்தமாக நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை மற்றும் புயலால் தஞ்சை மாவட்டத்தில் 24 கடற்கரை கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட 35 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் தஞ்சையில் முகாமிட்டு உள்ளனர்

டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தாலுக்காக்கள் மிகவும் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதே போல் 24 கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 14 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முகாமிலும். 800 பேர் தங்கும் அளவிற்கு வசதிகள் உள்ளன.

மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து 35 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் மக்களை மீட்டு கொண்டு வர பைபர் படகுகள், புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டால், மரங்களை அறுத்து அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரம், டார்ச் லைட், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.