பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ பெயர்‌/ பிறந்த தேதி/பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌ கோரி பெறப்படும்‌ விண்ணப்பங்களுடன்‌ இணைத்தனுப்பும்‌ ஆவணங்களின்‌ விவரம்‌ தெரிவித்தல்‌ தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இணை இயக்குநர்‌ கே.பி.மகேஸ்வரி, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

என்னென்ன இணைப்புகள் அவசியம்?

பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ பெயர்‌/ பிறந்த தேதி/ பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌ மேற்கொள்ள தங்கள்‌ அலுவலகங்களில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்களுடன்‌ கீழ்க்காண்‌ இணைப்புகள்‌ இணைக்கப்பட்டால்‌ மட்டுமே அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு கீழ்க்காண்‌ இணைப்புகள்‌ இல்லாத பட்சத்தில்‌, தங்கள்‌ அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வர்‌ பெயர்‌ / பெற்றோர்‌ பெயர்‌ திருத்தம்‌

அசல்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌

பத்தாம்‌ வகுப்பு மாற்றுச்‌ சான்றிதழ்‌ (டி.சி.) அசல்‌ / தலைமை ஆசிரியரால்‌ சான்றொப்பமிடப்பட்ட மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌

தலைமை ஆசிரியரது கடிதம்‌ மற்றும்‌ கல்விச்‌ சான்றிதழ்‌

பிறந்த தேதி திருத்தம்‌

அசல்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌

பள்ளி சேர்க்கை விண்ணப்பம்‌

பள்ளி சேர்க்கை நீக்கப்‌ பதிவேடு

பத்தாம்‌ வகுப்பு மாற்றுச்‌ சான்றிதழ்‌ (டி.சி.)

தலைமை ஆசிரியரது கடிதம்‌ மற்றும்‌ கல்விச்‌ சான்றிதழ்

பிறப்புச் சான்றிதழ்‌ நகல்‌

அரசிதழின்படி பெயர் மாற்றம் செய்யக்கோரும் தேர்வு

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு பொதுத் தேர்வெழுதி மதிப்பெண்‌ சான்றிதழ்களையும்‌ பெற்றுக்‌ கொண்ட பின்னர்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்து வெளியிடப்பட்டிருப்பினும்‌, அவ்வெளியீட்டின்படி மதிப்பெண்‌ சான்றிதழ்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள தமிழ்நாடு இடைநிலைக் கல்விச்‌ சான்று தேர்வுத் திட்ட விதிகளின்படி வழிவகை இல்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.