மருத்துவ சேவையில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுவது 108. உடல்நலக்குறைவால் அவதிப்படும் நோயாளிகளை வீடுகளுக்கே சென்று அழைத்துச் செல்லும் சிறப்பம்சம் கொண்டது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக்:

இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது.

அந்த கூட்டத்தில் அவர்கள் 2025-26ம் ஆண்டில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஊதியத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அக்டோபரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் முடிவு செய்துள்ளனர்.

என்ன காரணம்?

இதுதொடர்பாக, அவர்கள் கூட்டத்தில் பேசியதாவது, தமிழக அரசு இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் தொழிலாளர்களுக்கு 16 சதவீதத்திற்கும் குறைவாக ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அதை பின்பற்றாமல் குறைவான ஊதியம் வழங்கி வருவது சட்டவிரோதமான ஒன்றாகும்.

இதுதொடர்பாக, விரைவில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அக்டோபரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இவர்களது இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் சேவை என்பது தமிழ்நாடு மருத்துவ உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நோயாளிகள் அவதிக்குள்ளாகும் அபாயம்:

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் முடங்கி நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். திடீரென உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள், விபத்தில் சிக்குபவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியை அவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல அமைப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதால் இந்த இக்கட்டான சூழலுக்கு ஒவ்வொரு அமைப்பினரும் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிவு காணுமா தமிழக அரசு?

தற்போது, சென்னையில் தூய்மை பணியாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மறுபுறம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் போராட்டத்தை அறிவித்திருப்பது அரசுக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி சமரசம் செய்து இந்த போராட்டம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.