தஞ்சாவூர்: ஹாய் ஸ்டூடண்ட்ஸ்... இந்தாண்டு உங்களுக்கு எப்போ காலாண்டு தேர்வு தெரியுங்களா. அட என்னங்க ஸ்கூல் திறந்து 15 நாட்கள் கூட ஆகலை. அதுக்குள்ள காலாண்டு தேர்வா என்று பீதியாக வேண்டாம். இன்னும் 3 மாதம் இருக்குங்க.

பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி நடப்பு 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும். 2025-26ம் கல்வியாண்டில் மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது என்று தெரியுமா? எத்தனை நாட்கள் விடுமுறை என்று தெரியுங்களா. 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி முடிவடைகிறது.

பின்னர் செப்டம்பர் 27 சனிக்கிழமை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வருகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது. 1முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது.

நடப்புக் கல்வியாண்டில் முக்கியமான முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. அதே ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஆகும். ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான கோடை விடுமுறை காலம் தொடங்குகிறது.

தோல்வியை கண்டு துவளாமல் பொறுமையை கடைப்பிடித்தால் உயர்ந்த வெற்றி நிச்சயம் வந்து சேரும். தோல்வி என்பது வட்டமல்ல அதிலேயே சுழன்று கொண்டு இருப்பதற்கு. சிகரம் போல் வெற்றி இருக்கும் போது வட்டம் பற்றிய கவலை எதற்கு. விடா முயற்சியும், விடாத திறமையும்தான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். எத்தனை படிக்கட்டுகள் ஏறுகிறோம் என்பது பற்றி கணக்கில்லாமல் வெற்றியை நோக்கி புலி போன்ற பாய்ச்சல் காட்டினால் வெற்றி என்ற இனிய கனியை பெற முடியும்.

கடினமாக உழைத்தவர்கள் தோல்வியை சந்தித்தாலும் வெற்றியை பெற்றே இருக்கின்றனர். கவனமும், நம்பிக்கையும், முயற்சியும், திறமையும் தோல்வி என்ற பெருங்கடல் சூழ்ந்து நின்றாலும் ஆழ்கடலில் உள்ள வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த நாள் வெற்றியின் திருநாளாக அமையும் அமைகிறது. உயர பறக்க இறக்கைகள் மட்டும் போதாது. ஒரே ஒரு லட்சியம் என்ற குறிக்கோளை அடையும் தன்னம்பிக்கை என்ற உறுதி இருக்க வேண்டும். அந்த உறுதியை மனதில் நிறுத்தி வானில் உயரே, உயரே பறக்கும் பருந்தாக இருக்கும் மாணவர்களே. இன்னும் 3 மாதம் இருக்கிறது காலாண்டு தேர்வுக்கு. நன்கு படித்து முன்னேற வேண்டும். தேர்வை அருமையாக எழுதி லீவை கொண்டாடுங்கள். இப்போ படிக்க ஆரம்பியுங்கள்.