<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆந்திராவிலிருந்து வைக்கோல்களுக்கு மத்தியில் மறைத்து எடுத்து வரப்பட்ட 440 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போதைப்பொருள் தடுப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ஆந்திராவிலிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினருனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவையாறு தேரடி சந்திப்பில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திராவில் இருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த பொலிரோ வாகனத்தை தடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் 440 கிலோ கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தில்லைஸ்தானம் கிழக்கு வீதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் (26), திருவையாறு புனல்வாசல் மந்தைக்கரை வீதியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் பாண்டியன் (38) என்பதும் தெரியவந்தது. இதில் பாண்டியன் தனது பொலிரோ வாகனத்தில் ஆந்திரா மாநிலம் தடா பகுதியில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருவையாறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணை தெரியவந்தது. </p>
<p style="text-align: justify;">இதையடுத்து மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குழுவினர் 440 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், பொலிரோ வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாண்டியன், விக்னேஷ் இருவரையும் திருவையாறு டிஎஸ்பி அருள்மொழி அரசு முன்னிலையில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>