தஞ்சாவூர்: தஞ்சையில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த 3 ஜோடி மான் கொம்புகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மான்கொம்புகளை வைத்திருந்த பிரபாகர், அவரது சகோதரர் சுதாகர் ஆகியோரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மேலவீதி, கவிச்சந்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் மகன்கள் பிரபாகரன் (42), சுதாகர் (38). இந்நிலையில் இவர்களின் வீட்டில் சட்ட விரோதமாக மூன்று ஜோடி மான் கொம்புகள் வைத்திருப்பதாக தஞ்சாவூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரின் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் ஜோதி குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மேலவீதியில் பிரபாகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் அவர்களது வீட்டில் மூன்று ஜோடி மான் கொம்புகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த பிரபாகரனை வனத்துறையினர் விசாரணைக்கு மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து அவரது சகோதரர் சுதாகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின்பு பிரபாகரன் மற்றும் சுதாகர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் இல்லத்தில் மான் கொம்பு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் தற்போது இதை வைக்கவில்லை. என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மான் கொம்புகளை வீட்டில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மான் கொம்புகளை வீட்டில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி மான் கொம்புகளை வீட்டில் வைத்திருப்பது குற்றமாகும். எனவே அவர்கள் இல்லத்தில் இருந்து மூன்று ஜோடி மான் கொம்புகளை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வீட்டில் மான் கொம்புகளை வைத்திருப்பது தவறு, ஏனெனில் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் படி இது தடைசெய்யப்பட்டுள்ளது. இது வனவிலங்குகளை வேட்டையாடுவதையும், அவற்றின் உடல் பாகங்களை வைத்திருப்பதையும் குற்றமாக்குகிறது. மான் கொம்புகள் வைத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இந்தச் சட்டம், வனவிலங்குகளைப் பாதுகாப்பதையும், வேட்டையாடுதல் மற்றும் அவற்றின் பாகங்களைக் கையாள்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மான் கொம்புகள் வைத்திருப்பது இச்சட்டத்தின் கீழ் குற்றமாகும், மேலும் சட்டவிரோத விலங்குப் பொருட்கள் வைத்திருப்போருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமாக மான் கொம்புகள் சேகரிப்பது, வேட்டையாடலை ஊக்குவிப்பதோடு, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வீரத்தின் அடையாளமாக, வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன. அப்போது, பலர் துப்பாக்கி வைத்திருந்தனர். அவர்கள், மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறு படுத்தி காட்டிக்கொள்ள, முறுக்கு மீசையை அடையாளமாக வளர்த்து வந்தனர். மான் போன்ற சில விலங்குகள் உணவு, மருந்தாக பயன்படுத்தப்பட்டன. யானை தந்தம், சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளின் தோல், தலை, கொம்பு போன்றவை பதப்படுத்தப்பட்டு, வீட்டு சுவர், அலமாரிகளில் அழகு பொருளாகவும், அந்த வீட்டில் ஒரு வேட்டைக்காரர் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாவும் வைக்கப்பட்டன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1972ம் ஆண்டு, வனஉயிரின பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.