ஹைதராபாத்தில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு நீண்ட நேரம் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், PVR Cinemas நிறுவனத்துக்கு ₹75,000 செலுத்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

22 நிமிடங்கள் தாமதமான படம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 33 வயது வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தனது நண்பருடன் PVR திரையரங்கில் ‘குபேரா’ திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். இரவு 10.35 மணிக்கு படம் தொடங்கும் என டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் இரவு 10.30 மணிக்கே திரையரங்கிற்குள் சென்று தனது இருக்கையில் அமர்ந்துள்ளார்.

ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பு தொடர்ந்து விளம்பரங்களும் திரைப்பட முன்னோட்டங்களும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதனால் இரவு 10.52 மணி வரை திரைப்படம் தொடங்கவில்லை என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதன்பிறகு பொதுமக்கள் விழிப்புணர்வு தொடர்பான காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.

படம் தாமதமாகத் தொடங்கியதால், அது முடிவடையும் நேரமும் தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிகாலை 3 மணியளவில் தான் வீட்டுக்குச் சென்றதாகவும், இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தாமதம் தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து விளம்பரங்களுக்காக நுகர்வோரின் நேரத்தைப் பயன்படுத்துவது சேவைக் குறைபாடு எனக் கூறி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் PVR நிறுவனம், விளம்பரங்கள், திரைப்பட முன்னோட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு காணொளிகளைத் திரையிடுவது திரையரங்குகளில் வழக்கமாக நடைபெறும் நடைமுறை என்றும், இதனை சேவைக் குறைபாடாகக் கருத முடியாது என்றும் வாதிட்டது.

ரூ75 ஆயிரம் அபராதம்

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அதிக நேரம் வணிக விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதை சேவைக் குறைபாடாகக் கருதியது. இதையடுத்து வழக்கு தொடர்ந்த நுகர்வோருக்கு ₹20,000 இழப்பீடு வழங்க PVR நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவுக்காக ₹5,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, நுகர்வோர் நல நிதிக்கு ₹50,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி PVR நிறுவனம் மொத்தம் ₹75,000 செலுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற நியாயமற்ற வணிக நடைமுறையைத் தொடரக்கூடாது என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.