விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், தாதம்பட்டி கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு (GI) geographical-indication என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது. சமீபத்தில் மணக்கும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

சம்பா மிளகாய் வத்தல்

விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு ஏப்ரல் 04, 2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்கள்

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 3042 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. மிளகாய் பணப்பயிர். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சம்பா வத்தல் மற்ற மிளகாயை விட அதிக காரத்தன்மை (‘காப்சைசின்;”) அளவு 0.24 சதவிகிதம் கொண்டது மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் உள்ளது. சம்பா வத்தல் நீளம் 6 - 6.5 செ.மீ நீளமுடையதாகவும், கூர் முனை கொண்டதாகவும் இருக்கும். அதிக காரத்தன்மை கொண்ட சம்பா வத்தல் மதிப்பு கூட்டு பொருட்களான ஒலியோரெசின் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.

விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்கும்

புவிசார் குறியீடு மூலம் தயாரிப்புகளுக்கு சட்டப் பாதுகாப்பு, அங்கீகாரம் பெறாத மற்றவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் தற்போது, இந்த சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இனிமேல், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலை கிடைக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும், விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், தாதம்பட்டி கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மணக்கும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு... மற்றொன்றுக்கும் கிடைத்துள்ளது அது என்ன?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு தான்.. உடனே அப்ளே பண்ணுங்க !