தேசிங்கு ராஜா 2

எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தைப் போல் இப்படம் ரசிகர்களை கவருமா என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் முதல் பாகத்திற்கு அருகில் கூட படம் இல்லை என்பதே நிதர்சனம்

தேசிங்கு ராஜா 2 கதை

நாயகனான குலசேகர பாண்டியன் (விமல்) காவல் ஆய்வாளராக இருக்கிறார். மற்றொரு ஏரியா பெண் காவல் ஆய்வாளராக நடித்துள்ளார் புகழ். இருவருக்கும் இடையில் யார் பெரிய ஆள் என்கிற ஈகோ போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் பிரபல ரெளடி ஒருவர் கொல்லப்படுகிறார். எம்.எல்.ஏ ரவி மரியா தான் இந்த கொலையை செய்திருப்பதாக அந்த ரெளடி கும்பல் சந்தேகிக்கிறது. இதனால் அவனது மகனை கொல்ல திட்டமிடுகிறது. தனது மகனை காப்பாற்ற ரவி மரியா விமலிடம் உதவி கேட்கிறார். தங்களது ஈகோ மோதலில் விமலும் புகழும் எம்.எல்.ஏ மகனை எப்படி காப்பாறுகிறார்கள் என்பதே தேசிங்கு ராஜா 2 படத்தின் கதை.

விமர்சனம்

உண்மையைச் சொன்னால் இதுதான் கதை என்று சொல்லும் அளவிற்கு படம் தெளிவாகவே இல்லை. சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ் என படத்தில் இத்தனை நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும் எந்த காமெடிக்கும் சிரிப்பு வரவில்லை. சிதறலான திரைக்கதை , காமெடி என்கிற பெயரில் உளறிக் கொட்டும் கதாபாத்திரங்கள் என கவனமீர்க்காத பின்னணி இசை , என சராசரிக்கும் கீழே நிற்கிறது படம். வேண்டாவர்களை யாரையாவது பழிவாங்க வேண்டும் என்றால் ஏமாற்றி தேசிங்கு ராஜா 2 படத்திற்கு கூட்டிச் சென்று உட்கார வைக்கலாம்.