தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய இவருக்கு முதன்முதலில் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் உழைப்பு குறித்து இயக்குனர் விக்ரமன் ஒரு முறை நேர்காணலில் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

விஜய் ரொம்ப ஒழுக்கம்:

படப்பிடிப்பில் விஜய் ரொம்ப டிசிபிளின். காலையில் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.30 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு காஸ்ட்யூமுடன் வந்துவிடுவார். எவ்வளவு தூரம் இருந்தாலும் வந்துவிடுவார். நாங்கள் தங்கியிருந்தது நாகர்கோயில். நகரத்தின் மையத்தில் தங்கியிருந்தோம்.

அங்கிருந்து தினமும் 40 கி.மீட்டர் தொலைவில்தான் எங்கள் படப்பிடிப்பு நடந்தது. பத்மநாபபுரம் லொகேஷன், கன்னியாகுமரி சில நாட்கள் லொகேஷன், தளவாய் லொகேஷன் இருக்கும். அது நாகர்கோயில்ல இருந்து 40-50 கி.மீட்டருக்கு அதிகமாகவே இருக்கும். அங்க படப்பிடிப்பு. இப்படித்தான் நடந்தது.
சின்சியர்:

அப்போ சாலைகள் எல்லாம் மிகவும் மோசமாக இருக்கும். நாகர்கோயில்ல இருந்து எப்படியும் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால், அவர் 6.30 மணிக்கு மேக்கப், காஸ்ட்யூமோட தயாராக இருப்பார். அதேமாதிரி நம்பியார் சார், நாகேஷ் சார் எல்லாரும் தயாராக இருப்பாங்க. சின்சியர். கரெக்ட் டைம்க்கு இருப்பாங்க. அதுனால, நமக்கும் 6.30 மணிக்கு ஸ்பாட்ல இருக்கனும்னு ஒரு உத்வேகத்தை கொடுக்குது.

இவ்வாறு அவர் கூறினார்.

ப்ளாக்பஸ்டர் வெற்றி:

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படம் 1996ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த் ஆகியோர் நடித்திருப்பார்கள். இவர்களுடன் சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், சுகுமாரி, சி.ஆர்.விஜயகுமாரி, மீசை முருகேசன், மதன்பாப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்க்கு அதுவரை எந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாத நிலையில், இந்த படம் 250 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. காதலியிடம் தன் காதலை சொல்லாத காதலன், அவளது காதலனுடன் அவளை அவர்களது குடும்பத்தினர் சம்மதத்துடன் சேர்த்து வைப்பதே இந்த படத்தின் திரைக்கதை ஆகும். இந்த படத்திற்கு பிறகே நடிகர் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண்கள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.