57 - வது நினைவு நாள்

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 57வது நினைவு நாளான இன்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது ;

அமமுகவிற்கு யாரையும் கண்டும் பொறாமையும் கிடையாது. அச்சமும் கிடையாது. நாங்கள் எல்லாம் அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள். தமிழையும் திராவிடத்தையும் கேடயமாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களை திமுக ஏமாற்றி பிழைத்து வருகிறது. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறைக்கு பாதுகாப்பு இல்லை எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம். கஞ்சா சந்தையாக தமிழ்நாடு விளங்கி உள்ளது.

திமுக பச்சை பொய் பேசுகிறது

போதைப் பொருள் புழக்கம் பட்டி தொட்டி எல்லாம் பரவியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று திமுக பச்சை பொய் பேசுகிறது. பாராளுமன்ற தேர்தலில் திமுக பணநாயகத்தின் மூலம் வெற்றி பெற்றனர். உறுதியாக இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவை முடிவுக்கு கொண்டு வரும். திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர். வெற்று விளம்பர திட்டங்கள் வெறும் வார்த்தை ஜாலங்கள் இதை வைத்துக் கொண்டு மக்களின் வரிப் பணத்தை உண்டு கொளுக்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

பல துறைகளில் 30 சதவீத வரை கமிஷன் பெறக் கூடிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏழை எளிய மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று திமுக நினைக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் அமமுக எந்தவித அழுத்தமும் இன்றி இணைந்துள்ளோம்.

விஜய் எங்களுக்கு எதிரி அல்ல

விஜய் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். மாறாக எம்.ஜி.ஆர் புகைப்படத்தை வைத்துக் கொண்டு எனது ரோல் மாடல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா என்று கூறிக் கொண்டு , அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறுகிறார். அதிமுகவில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை வைத்துக் கொண்டு அதிமுக ஊழல் ஆட்சி என்று கூறுவது தவறு.

விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களின் ஒரே எதிரி திமுக தான். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எங்களின் கொள்கை தான் பாஜகவின் கொள்கை. இ.பி.எஸ் - யை போன்று பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் , செங்கோட்டையன் , வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர்கள் எனக்கு அருமை அண்ணன்கள் தான். அவர்கள் பிரிந்து சென்றதில் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் தனி நபர் போய் ஒரு இயக்கத்தை பாதித்து விட முடியாது.

பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அம்மாவின் ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதை அவர் புரிந்து கொண்டிருப்பார். போன தேர்தலில் நாங்கள் பிரிந்து இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் அதை உணர்ந்து இந்த முறை அனைவரும் ஒன்றிணைந்தோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல அம்மாவின் ஆட்சி வரவேண்டும் என்பதற்கான கூட்டணி