ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் போலியான URL Link - களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ;

சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் IIFL Capital Ltd என்ற முதலீட்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக நிறைய புகார்கள் வந்துள்ளன.

வாட்ஸ் அப் குழுவில் சேர்ப்பு

இந்த மோசடிகள் சமூக வலைதள விளம்பரங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ் அப் குழுவில் சேர்த்து , பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி , பணத்தை செலுத்த தூண்டப்படுகின்றனர். மோசடியாளர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லாபம் வழங்குவது போல் குறைந்த தொகையை எடுக்க அனுமதித்து , நம்பிக்கை ஏற்படுத்தி பிறகு அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுத்தி மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனர்.

அங்கீகரிக்கப்படாத செயலிகள்

இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பும் வங்கி கணக்குகள் அனைத்தும் IIFL நிறுவனத்தை சாராத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப மோசடியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் எவ்வித SEBI விதிமுறைப்படி எந்தவொரு ரசீதோ, ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை. மேலும் IIFL Capital Ltd நிறுவனமோ அல்லது SEBI-யில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனங்களோ இதுபோன்ற குழுக்கள் அல்லது அங்கிகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

பண இழப்பு ஏற்பட்டால் ?

எனவே இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் , உத்தரவின் பேரில் , மத்திய குற்றப்பிரிவு சார்பில் பொது மக்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்கள் , போலியான முதலீட்டு செயலிகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.