அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலித நல்லூரை சேர்ந்தவர் வெளியப்பன்(49). இவர் அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி காலை வெளியப்பன் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அந்த வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெளியப்பனை சராமரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இது குறித்து தகவலறிந்த பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முன்விரோதம் காரணமா?

குறிப்பாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன் ஊரில் கோவில் கொடை விழா நடந்துள்ளது. அதில் வெளியப்பனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் பாலமுருகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகனை வெளியப்பன் தாக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்றது.

இளைஞரை பிடித்து விசாரணை, வாக்குமூலம்:

குறிப்பாக சந்தேகத்தின் பேரில் பாலமுருகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர், விசாரணையில், கடந்த மார்ச் மாதம் கோவில் கொடைவிழாவில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கியதில் காயம் அடைந்த நிலையில் பாலமுருகனின் பெரியப்பா கோவேந்திரன் மற்றும் வெளியப்பன் அண்ணன் மகன் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதனை மனதில் வைத்துக்கொண்டு நடைபயிற்சி சென்ற வெளியப்பனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக தற்போது பாலமுருகன் மற்றும் அவரது பெரியப்பா கோவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.