வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம்: போலி மருந்து அதிபர் ராஜாவை டெல்லிக்கு தூக்கிய சிபிஐ!

1 hour ago 1
ARTICLE AD

புதுச்சேரி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.200 கோடி போலி மருந்து வழக்கை மேல் நடவடிக்கை இன்றி முடக்குவதற்காக, டெல்லி காவல் ஆய்வாளருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், போலி மருந்து நிறுவன அதிபர் 'ராஜா' என்ற வள்ளியப்பனை சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆக்ராவில் தொடங்கிய சோதனை

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பெருமளவில் போலி மருந்துகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர்தான் இந்த போலி மருந்து நெட்வொர்க்கின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இவர் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான 'சன் பார்மா' உட்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகளைத் தயாரித்து, நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

ரூ.200 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

இதுகுறித்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த ராஜாவின் ரகசிய போலி மருந்து தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) மாற்றப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா, ராணா, மெய்யப்பன், விவேக், அவரது கூட்டாளியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிகண்டன் மற்றும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உட்பட 4 பெண்கள் என மொத்தம் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிபிஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு

குற்றவாளி ராஜாவுக்கு பல்வேறு மாநிலங்களில் போலி மருந்து விற்பனைத் தொடர்பு இருந்ததால், வழக்கின் தன்மையைக் கருதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதற்கிடையே, கைது செய்யப்பட்டிருந்த ராஜா உள்ளிட்ட 26 பேரும் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

வழக்கை முடக்க ரூ.3 கோடி பேரம்: டெல்லியில் ஹவாலா டீல்

சிபிஐ தன் மீது பதிவு செய்துள்ள இரு வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வழக்கை அப்படியே முடக்குவதற்காக, ராஜா டெல்லியில் உள்ள சில உயர் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது வழக்கை முடிக்க போலீஸ் தரப்பில் ரூ.3 கோடி லஞ்சம் கேட்கப்பட்டு, இறுதியாக ரூ.2 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டு முடிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த ஜூன் 6-ம் தேதி லஞ்சப் பணத்தை ஹவாலா முறையில் டெல்லியில் பட்டுவாடா செய்ய ராஜா திட்டமிட்டார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்ட் நாகூரான் என்பவரிடம் முதற்கட்டமாக ரூ.1 கோடியை ராஜா கொடுத்துள்ளார். நாகூரான், ராஜாவின் நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் என்பவரின் மூலமாக டெல்லியில் உள்ள மற்றொரு ஹவாலா ஏஜெண்டைச் சந்தித்துள்ளார்.

பின்னர், அந்த ஏஜெண்ட் கொடுத்த பணத்தையும், தான் கொண்டு சென்ற ரூ.1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியை டெல்லி காவல் ஆய்வாளர் பிரவின்குமாரிடம் கொடுப்பதற்காக ராஜ்குமார் சென்றுள்ளார்.

கையும்களவுமாக பிடித்த சிபிஐ: அடுத்தடுத்து கைது நடவடிக்கை

லஞ்சப் பணம் கைமாறும் போது, டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் அதிரடியாகப் புகுந்து காவல் ஆய்வாளர் பிரவின்குமார் மற்றும் ராஜாவின் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ரூ.2 கோடி பணத்துடன் கையும்களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக: ஜூன் 8-ம் தேதி சென்னையில் வைத்து ஹவாலா ஏஜெண்ட் நாகூரானை சிபிஐ லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான மருந்து நிறுவன அதிபர் ராஜாவை புதுச்சேரியில் வைத்து சிபிஐ அதிரடியாகக் கைது செய்தது.

வீட்டில் சோதனை & சொத்துக்கள் பறிமுதல்

ராஜாவைக்கைது செய்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராஜாவை புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், லஞ்ச வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேல் விசாரணைக்காக அவரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article