6 மாதங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை

தெலங்கானா மாநிலம் கடிபிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 51) ஆட்டோ டிரைவர். இவரது மகள்கள் ராஜஸ்ரீ, தேஜஸ்வினி, மனோஜ்னா. இந்நிலையில் கடந்த 2023 - ம் ஆண்டு ராஜஸ்ரீயை , வாரங்கல் மாவட்டம் ஷயாம்பேட் ஹவேலியைச் சேர்ந்த பிரவீண் ( வயது 30 ) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது ரூ.3 லட்சம் வரதட்சணை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொடுத்தாராம். பிரவீண், குடும்பத்துடன் ஐதராபாத்தில் தங்கியுள்ளார். அங்குள்ள பிரபல குளிர்பான நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

பிரவீண் - ராஜஸ்ரீ தம்பதிக்கு ஜெயான்ஷ் ( வயது 2 ) என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜஸ்ரீயை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்ரீ கடந்த மாதம் வீட்டில் தவறி விழுந்ததால் வலது கையில் முறிவு ஏற்பட்டு வேலைகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ராஜஸ்ரீ , தனது தந்தை வீட்டில் பெண் குழந்தைக்கு அன்னபிரசன்ன பூஜை செய்ய வந்தார். கடந்த வாரம் பிரவீணும் வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் மாமனாரிடம் பிரவீண் தகராறு செய்தார்.

மாமனார் மற்றும் மனைவியை சுத்தியால் தாக்கிய மருமகன்

ஆத்திரத்தில் இருந்த பிரவீண் வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி ராஜஸ்ரீ, மாமனார் ராஜசேகர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். மண்டை உடைந்து இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத பிரவீண், வீட்டில் இருந்த டீசலை எடுத்து அவர்கள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 2 பேரும் உடல் கருகி இறந்தனர். பின்னர் பிரவீண் ராஜஸ்ரீயின் அத்தைக்கு போன் செய்து , தன் மனைவியும் மாமாவும் தீ விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்ரீயின் அத்தை மற்றும் தங்கை தேஜஸ்வினி ஆகியோர் வந்து பார்த்த போது இறந்தவர்களின் நெற்றியில் காயமும், அருகில் சுத்தியலும் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தேஜஸ்வினி போலீசில் புகார் செய்தார். இதனால் பிரவீண், தனது மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மனைவி, மாமனாரை சுத்தியலால் தாக்கி, டீசல் ஊற்றி எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.