தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 4 காவலர்கள் மீது தாக்குதல் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறு என்று புதுக்கோட்டை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மிகவும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய விளக்கத்தை அளித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எக்ஸ் வலைதளத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்தில் இருதரப்பினர் இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசார் 4 பேர் காயம் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவி வருகிறது. இதை பலரும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்த சம்பவமானது உண்மை நிலை இதுதான். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு பெட்ரோல் பங்க் அருகே நேற்று 5-ம் தேதி இரவு 9.30 மணியளவில் இரு தரப்பை சேர்ந்த நபர்களுக்கு இடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தங்களின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பைக்குகளில் பின்தொடர்ந்து சென்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே எக்ஸ் வலைதளத்தில் இரு தரப்பினர் இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலித் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இதுகுறித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவல்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை சற்றே தணிந்துள்ளது.