தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2019 டிசம்பர் மற்றும் 2021 அக்டோபர் மாதங்களில் முறையே இரண்டு கட்டங்களாக நடத்தியது. முதற்கட்டமாக புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம்) தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 2019-ல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. தற்போது 28 மாவட்டங்களில் (மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தவிர்த்து) தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 06.01.2020 அன்று பதவியேற்றனர். அவர்களின் பதவிக்காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததையடுத்து, மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் 06.01.2025 முதல் 19.10.2026 வரை நியமனம் செய்து ஆணையிட்டது.

இரண்டாம் கட்டமாக, புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அக்டோபர் 2021-ல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 20.10.2021 அன்று பதவியேற்றனர். அவர்களின் பதவிக்காலம் 19.10.2006 அன்று நிறைவடைந்துவிட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்

இதற்கிடையில், அதிக மக்கள் தொகை மற்றும் பரந்த பரப்பளவு காரணமாக, மூன்றடுக்கு ஊராட்சிகளில் பிரித்தல், இணைத்தல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 93 புதிய கிராம ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 1 மாவட்ட ஊராட்சி (மயிலாடுதுறை மாவட்டம்) உருவாக்கப்பட்டது. மேற்கண்ட புதிதாக உருவாக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகளில் நிர்வாகத்தை மேற்கொள்ள தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் பிரிவு 253-ன் கீழ் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு என்ன பொறுப்பு? (20.10.2026 முதல் 19.04.2027 வரை)

1.மாவட்ட ஊராட்சி தனி அலுவலர்

கூடுதல் ஆட்சியர் / துணை ஆட்சியர் (வளர்ச்சி) / இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள். மாவட்ட ஊராட்சியின் அனைத்து நிர்வாகம் மற்றும் திட்ட பணிகளுக்கும் முழு பொறுப்பு.

2. ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்கள். ஒன்றியத்தின் தலைவருக்கான அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்துவார்.

3. கிராம ஊராட்சி தனி அலுவலர்

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள். கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரத்துடன் தினசரி நிர்வாகம், தீர்மானம், நிதி நிர்வாகம் செய்வார்.

தனி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட 5 முக்கிய அறிவுரைகள்:

பதிவேடுகள் ஒப்படைப்பு கட்டாயம்

பழைய நிர்வாகத்திடம் இருந்து தீர்மானப் புத்தகம், வரவு-செலவு பதிவேடுகள், பணம் பதிந்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் (Bank Pass Book) ஆகியவற்றை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான அறிக்கையை படிவம் 2, 3, 4-ல் தயார் செய்ய வேண்டும்.

நாளை காலை 10 மணிக்குள் அறிக்கை தாக்கல்

பொறுப்பு பெற்றுக்கொண்டமைக்கான அறிக்கையை படிவம்-5ல் 23.10.2026 காலை 10.00 மணிக்குள் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) சமர்ப்பிக்க வேண்டும். உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) அதை தொகுத்து படிவம்-1ல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒப்படைப்பு அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.

வங்கி பணத்தை தொடக்கூடாது - கடும் கட்டுப்பாடு

TNPASS மூலம் நடக்கும் வரவு-செலவு தவிர, மற்ற வங்கிக் கணக்குகளில் உள்ள Uncashed Cheques (காசாக்கப்படாத காசோலைகள்) எதையும் தனி அலுவலரின் (மண்டல துணை BDO / உதவி இயக்குநர்) முன் அனுமதி இல்லாமல் காசாக்கக்கூடாது. இதற்காக வங்கி மேலாளர்களுக்கு முன்னணி வங்கி மேலாளர் (LDM) மூலம் சுற்றறிக்கை அனுப்ப உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கூடுதல் பொறுப்பு

அனைத்து தனி அலுவலர்களும் தங்களின் தற்போதைய பதவி பொறுப்புடன், கூடுதலாக இந்த ஊராட்சி தனி அலுவலர் பொறுப்பையும் கவனிக்க வேண்டும். அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் தடையின்றி செயல்படுத்துவது அவர்களின் முக்கிய கடமை.

* தென்காசி - தூத்துக்குடி மாவட்ட மாற்றத்திற்கு ஸ்பெஷல் உத்தரவு

தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து 12 கிராம ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 12 ஊராட்சிகளின் அனைத்து பதிவேடுகள், பணம், கணக்குகளை தென்காசி உதவி இயக்குநர் மூலம் தென்காசி கலெக்டர் பெற்று, தூத்துக்குடி கலெக்டர் மூலம் கோவில்பட்டி தனி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.