தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 6.88 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1.81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,670 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் கடந்த ஆண்டு அணை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்காமல் தாமதமாக ஜூலை மாதம் 28ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நிறைவடைந்தது. தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு அதுவும் அறுவடை நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு வழக்கம் போல் கடந்த 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையடுத்து அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை முடுக்கி விட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 597 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன. நெல் கொள்முதல் குறைந்ததையடுத்து பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன.

தற்போது கோடை நெல் அறுவடை நடைபெற்று வருவதால் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை 6 லட்சத்து 88 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. மேலும் 1 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,670 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் செல்வம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடியில் நெல் விளைச்சல் அதிக அளவு நடைபெற்றது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு 597 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டன. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டன.

தற்போது கோடை நெல் கொள்முதல் செய்வதற்கும் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளும் தங்கள் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திற்கு சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை தாண்டி 6 லட்சத்து 53 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது 214 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் தினமும் 3,500 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் ரூ.1,670 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். சில பகுதிகளில் நாற்று விடும் பணிகள் நடந்து வருகிறது. இன்று மாலை கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.