ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. பொதுவாக மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் மார்க்கமான பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அதற்கு முக்கிய காரணம் சௌகர்யம், பாதுகாப்பு, குறைந்த கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அதேபோல் இந்தியன் ரயில்வேயும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும், சிறப்பு சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகிறது. நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் வாங்கியவுடன் இலவச சேவைகள் அனைத்தையும் பெறுவதற்கு உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.

அந்த வகையில் ரயில்வே துறை ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தெந்த சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறித்த விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அனைத்து ரயில்களிலும் AC1, AC2 மற்றும் AC3 வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலையணை, இரண்டு படுக்கை விரிப்புகள், போர்வை போன்றவற்றை இந்தியன் ரயில்வே வழங்கி வருகிறது. நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது இந்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதுகுறித்து புகார் செய்ய முடியும். அப்படி புகார் செய்யும் பட்சத்தில் அதற்கான பணத்தை நீங்கள் திரும்ப பெறவும் முடியும்.

நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுக்கு அல்லது உங்களுடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கு திடீரென ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அங்குள்ள டிக்கெட் பரிசோதகர், ரயில் கண்காணிப்பாளர்களை தொடர்பு கொள்வதன் மூலம் உங்களுக்கான முதலுதவியை இந்தியன் ரயில்வே இலவசமாக வழங்கும். முதலுதவி அளித்த பின்னர் மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் அடுத்து வரும் ரயில் நிறுத்தத்தில் நியாயமான கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை பெறவும் இந்தியன் ரயில்வே ஏற்பாடு செய்யும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரயிலுக்காக சிறிது நேரம் அல்லது சிலமணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பிளாட்பாரத்தில் காத்திருக்காமல் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கான ஏசி அல்லது ஏசி அல்லாத காத்திருப்பு கூடத்தில் நீங்கள் வசதியாக ஓய்வு எடுக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். ஆனால் உங்களின் ரயில் டிக்கெட்டை காட்டினால் போதுமானது.

நீங்கள் துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், அந்த ரயில்கள் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக தாமதமாக நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய நேரிட்டால், உங்களுக்கான உணவை இந்தியன் ரயில்வே இலவசமாக வழங்கும். இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உடமைகளை பாதுகாக்கும் லாக்கர் அறைகள் உள்ளது பலருக்கும் தெரியாது. இந்த அறைகளில் குறிப்பிட்ட கட்டணம் மட்டும் செலுத்தி உங்கள் பொருட்களை அந்த லாக்கர் அறைகளில் அதிகபட்சமாக 1 மாதம் வரை வைத்திருக்கும் வசதியும் உள்ளது.

இனிமேல் ரயில் பயணம் செய்பவர்கள் எந்த ரயிலில் என்னென்ன இலவச சேவைகள் கிடைக்கின்றன என்பதை நீங்கள் விசாரித்து அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. ரயிலில் உங்களுக்கான இலவச சேவை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தால் அந்த சேவைகள் உங்களுக்கு முறையாக வழங்கப்படும்.