தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா ரமேஷ் கண்ணா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களுக்கு நண்பர்களாக நடித்துள்ளார். பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களின் திரைக்கதையில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

ரமேஷ் கண்ணா:

ரசிகர்களுக்கு நடிகராக நன்கு அறிமுகமான இவர் காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், விக்ரமன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி மற்றும் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். விக்ரமன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் பல வெற்றிப்படங்களின் திரைக்கதையில் அனுபவம் கொண்ட இவர் இத்தனை ஆண்டுகால திரை வாழ்க்கையில் ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

இயக்கிய படம்:

1999ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான தொடரும் படமே இந்த திரைப்படம் ஆகும். கே.எஸ்.ரவிக்குமார் ஸ்ரீதேவி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு தெலுங்கில் வெளியாகிய மாவிச்குரு படத்தை ரீமேக் செய்து இயக்கி தருவதாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் அப்போது மற்ற பட பணிகளில் தீவிரமாக இருந்ததால் இந்த வாய்ப்பு ரமேஷ்கண்ணாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தில் ஜெயராம், மீனா ஜோடியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், படத்திற்கு மாவிளக்கு என்றும் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால், பின்னர் இந்த படத்தில் அஜித், தேவயானி, ஹீரா ஜோடி தேர்வானார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகராக பரிமாணம்:

கணவன் மீது அதீத அன்பு கொண்ட மனைவியே தனது கணவனை இன்னொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. ஆனாலும், நல்ல குடும்ப படமாக பெயர் பெற்றது. அந்த படத்தில் அஜித், தேவயானி, ஹீரா மட்டுமின்றி மணிவண்ணன், வடிவேலு, ஜெமினி, செளகார் ஜானகி, டெல்லி கணேஷ், ஒரு விரல் கிருஷ்ணராவ், காகா ரவி, செந்தில், பாலு ஆனந்த், விசித்ரா ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு ரமேஷ்கண்ணாவிற்கு எந்த படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித் ஆகியோருடன் நடிக்கத் தொடங்கினார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.