தன்னிடம் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதால், அதனை புகாராக அளித்துள்ளார் இளம்பெண். இதற்கு எதிராக பைக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

இளம்பெண்ணுக்கு தொடர் தொல்லை

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டி பாரதிதாசன் முதல்தெரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜெயசுதா(28). இவர் தனது தந்தையுடன் வீட்டில் வசித்துவந்தார். பின்னர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஜெயசுதாவின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காலமான நிலையில் வீட்டில் ஜெயசுதா மட்டும் தனியாக வசித்துவருகிறார். ஜெயசுதாவின் வீட்டின் அருகேயுள்ள பாலு என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயசுதாவிடம் தவறாக பேச முயன்ற போது அது குறித்து கிராமத்தினரிடமும் குடும்பத்தினரிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலு தன்னை அசிங்கப்படுத்தியதாக கூறி அடிக்கடி ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்துவந்துள்ளார்.

இளம்பெண் மீது கடும் தாக்குதல்

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதியன்று தனது வீட்டு வாசல் முன்பாக ஜெயசுதா இருக்கையில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது பாலு தனது வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் சென்ற பின்பாக திடீரென திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயசுதா மீது பைக்கை மோதியதோடு தான் வைத்திருந்த இரும்பு ராடை வைத்து தாக்கியுள்ளார். தொடர்ந்து உன்னை... கொலை செய்வதற்காகத்தான் மேலே வண்டியை ஏற்றினேன். என கூறிவிட்டு சென்றதாக, மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி

இதனையடுத்து படுகாயமடைந்த ஜெயசுதா சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெயசுதா அளித்த புகாரின் கீழ் மேலூர் காவல்துறையினர் பாலு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இதனிடையே இளம்பெண் ஜெயசுதா மீது பைக்கை மோதி கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சித்து தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதால், அதனை புகாராக அளித்த இளம்பெண் மீது, பைக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.