உழைப்பாளர் தின ஸ்பெஷல் - திருமங்கலம் ரஜினி கோயிலில் ஆட்டோக்காரர் கெட்டப்பில் 'பாட்ஷா' கட்-அவுட்... 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு.

ரஜினி கோயிலில் வழிபாடு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு தீவிர ரசிகரான முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோயில்' கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். இங்கு தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மே தினத்தை (உழைப்பாளர் தினம்) உழைப்பின் உன்னதத்தை போற்றும் வகையில் ஒரு வித்யாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டோ அருகில் ரஜினி நிற்பது போன்ற கட்-அவுட் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.

இனிப்புகள் வழங்கப்பட்டன.

அந்த கட்டவுட்டிற்கு மே தின விழாவின் ஒரு பகுதியாக, பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து, உழைப்பாளர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும் என வேண்டி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. உழைப்பாளர் தினத்தின் அடையாளமாக, ரஜினி சிலைக்கு முன்பாக அவரது 'கூலி' படத்தின் புகைப்படத்தோடு, தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கட்டிங் பிளேடு, திருப்புலி, நட்டு, போல்டு உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு "HAPPY LABOUR'S DAY" என்ற எழுத்து வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

HAPPY LABOUR'S DAY

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் கார்த்திக் பேசியபோது..," தொடர்ந்து நாங்கள் அவதான்டாக மே தினத்தை குலதெய்வ ரஜினி கோயிலில் கொண்டாடுவதாகவும், உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்பேனர், போல்ட் மற்றும் நட் போன்ற இரும்பு கருவிகளைக் கொண்டே "HAPPY LABOUR'S DAY" என்ற எழுத்து வடிவிலான அலங்காரத்தை இந்த ஆண்டு கோவிலில் அமைத்துள்ளதாகவும்.

"நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் மேலோங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை" என்று கூறிய கார்த்திக், தன் குடும்பத்தினருடன் இணைந்து அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில் சார்பாக அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.