கோவையில் கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் நபர்கள் அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேவையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும், உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பின்னர் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை பறக்கும் படை ரெய்டில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை நகரில் உள்ள ப்ரூக்ஃபீல்டு சாலை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின் போது அந்த வாகனத்தில் ரூ.6,59,000 ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டுநரிடம் கேட்டபோது, சாக்லேட் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக அந்தப் பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கோவை மத்திய மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், விதிமுறைகளின்படி பணம் திருப்பி வழங்கப்படும் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.