Karnataka DGP Ramachandra Rao: கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக டிஜிபி பணியிடை நீக்கம்:

கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் (சிவில் உரிமைகள் அமலாக்கம்) கே. ராமச்சந்திர ராவ் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து பெரும் பேசுபொருளாக வெடித்துள்ளது. இதனிடையே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ”ஒரு அரசு ஊழியருக்குப் பொருந்தாத ஆபாசமான முறையில் டிஜிபி நடந்து கொண்டார், அரசாங்கத்திற்கு அவமானத்தையும் ஏற்படுத்தினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வீடியோக்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த ராமச்சந்திர ராவ் விளக்கமளித்துள்ளார். இதனிடையே, மாநில உள்துறை அமைச்சரை சந்தித்த அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீருடையில், அலுவலகத்தில் சல்லாபம்?

வீடியோக்கள் உண்மையானதா? என உறுதி செய்யப்படாத நிலையில், ராமச்சந்திர ராவ் தொடர்பான வீடியோக்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில், தனது அலுவலகம் போன்ற இடத்தில் டிஜிபிக்கான பணி சீருடையிலேயே, மூன்று பெண்களுடன் அவர் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை அவருக்கு நேர் எதிராக அமர்ந்திருந்த யாரோ ஒருவர் தான் வீடியோவாக பதிவு செய்துள்ளார் என்பதை, வீடியோவில் கேமராவின் முன்பு அவ்வப்போது விரல்கள் நகர்வதன் மூலம் உணர முடிகிறது. இதுதொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ள மாநில அரசு, உரிய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ராமச்சந்திர ராவ் எங்கேயும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த ராமச்சந்திர ராவ்?

தங்கக் கடத்தல் வழக்கில் சில மாதங்களுக்கு முன்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நடிகை ரன்யா ராவின் தந்தை தான் டிஜிபி ராமச்சந்திர ராவ். மகளுக்கு இவர் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழவே கட்டாய விடுப்பிலும் அனுப்பட்டு பிறகு மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டார். 1993ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், காவல் மற்றும் உள்கட்டமைப்பில் பல தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். கர்நாடக மாநில காவல் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். செப்டம்பர் 2023ம் ஆண்டு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பதவிக்கு உயர்த்தப்பட்டார். நகர்ப்புற காவல் மற்றும் திட்ட மேலாண்மையில் ராமச்சந்திர ராவ் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். பெங்களூரு பெருநகரப் பணிக்குழுவின் கூடுதல் காவல் தலைமை இயக்குநராகவும் (ADGP), தெற்கு ரேஞ்சிற்கான காவல் தலைமை ஆய்வாளராகவும் (IGP) பணியாற்றி, கர்நாடகா முழுவதும் காவல் பணியில் நீண்ட கால அனுபவத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போலியா? பழைய வீடியோக்களா?

வீடியோக்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திர ராவ், ”வீடியோக்களை கண்டு நானும் அதிர்ச்சியடைந்தேன். இது அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் பொய். அந்த வீடியோ அனைத்தும் தவறானது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி, எப்போது நடந்தது, யார் இதைச் செய்தார்கள் என்பது பற்றியும் நான் யோசித்து வருகிறேன். இந்தக் காலத்தில் எதுவும் (செயற்கை நுண்ணறிவு -AI மூலம்) நடக்கலாம். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என பதிலளித்தார். இவை பழைய வீடியோக்களா? என்ற கேள்விக்கு, “பழையது என்றால், எட்டு வருடங்களுக்கு முன்பாக நான் பெலாகவியில் பணியாற்றியபோது” என குறிப்பிட்டுவிட்டு கூடுதல் விவரங்கள் எதையும் வழங்காமல் ராமச்சந்திர ராவ் நகர்ந்தார்.