கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா (Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல் (primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மூளையைத் தின்னும் அமீபா தொற்று காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து மருந்துகள் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலப்புரத்தில் உள்ள வண்டூரைச் சேர்ந்த 56 வயது பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமையன்று மதியம் இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமீபா மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த வயநாட்டில் உள்ள சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் சனிக்கிழமை காலை உயிரிழந்தார். மலப்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு சென்ற வாரம் வியாழக்கிழமை அமீபா மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

மலப்புரத்தில் உள்ள வந்தூரைச் சேர்ந்த எம். ஷோபனா கடந்த வியாழக்கிழமை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மிகவும் ஆபத்தான நிலையிலும், மயக்க நிலையிலும் இருந்தார். தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோதிலும், தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், தொற்று வேகமாகப் பரவியதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 45 வயது ரிதேஷ் என்பவர் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமீபா தொற்றால் 3 மாதக் குழந்தை, 9 வயது சிறுமி உள்பட ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான பாதிப்புகள் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்தாண்டு கேரளம் முழுவதும் 42 பேருக்கு அமீபா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் மலப்புரம் மாவட்டத்தில் சாஜி என்பவர் அமீபிக் மூளைத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார் அவருக்குக் கல்லீரல் தொடர்பான குறைபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இந்தத் தொற்று ஏற்பட்டு 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலப்புரத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நோய்த்தொற்றின் விளைவை கருத்தில் கொண்டு நகராட்சி மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.