வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அடுத்த விசாரணை நடைபெறும் வரை வக்பு வாரியங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்கக் கூடாது என்றும் வக்பு சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி. வி. சஞ்சய் குமார், கே. வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

"முஸ்லிம்கள் வயிற்றில் பாலை வார்த்த நீதிமன்றம்"

இந்த உத்தரவை வரவேற்றுள்ள தவெக தலைவர் விஜய், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தான் எப்போதும் துணை நிற்பேன் என குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம்…

— TVK Vijay (@TVKVijayHQ) April 17, 2025

பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் வாக்குகளை குறிவைத்து தவெக தலைவர் விஜய், பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். தவெக சார்பில் நடத்தப்பட்ட இப்தார் விருந்தில் கலந்து கொண்டது தொடங்கி மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வரை தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.