“உ.பி, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களின் ஐஏஎஸ் தேர்வு மையங்கள் !!! இந்திய ஆட்சி முறையின் எதிர்காலம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், வகுப்பறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பலர் தங்களது தேர்வுக்கான விடைகளை காப்பி அடிப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு, வடமாநிலங்களில் ஐஏஎஸ் தேர்வின் போது நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact-check:

நாம் மேற்கொண்ட ஆய்வில் இந்நிகழ்வு உத்தரபிரதேசத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி தேர்வின் போது நடைபெற்றது தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதைக் கண்டறிய அதன் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, National Students Union of India என்ற ஃபேஸ்புக் பக்கம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தது. மேலும், அதில் “உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி தேர்வில் முறைகேடு நடக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2024ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக India Today ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள கல்லூரி ஒன்றில் எல்.எல்.பி தேர்வின் போது அப்பட்டமாக காப்பி அடித்த மாணவர்கள் பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் வெளிப்படையாக ஏமாற்றுவதை இது காட்டுகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். தேர்வில் முறைகேடு செய்ததாக 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கூடுதலாக, அவத் சட்டக்கல்லூரியில் 12 மாணவர்களும், இரண்டாவது ஷிப்ட் தேர்வின் போது TRC சட்டக்கல்லூரியில் 25 மாணவர்களும் பிடிபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Zee News ஊடகமும் வெளியிட்டுள்ளது.

மேலும், Dainik Bhaskar வெளியிட்டுள்ள செய்தியின் படி, பாரபங்கி நகர சட்டக் கல்லூரியில் தேர்வில் நடைபெற்ற மோசடி ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட சட்டத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனுடன், நகர சட்டக் கல்லூரிக்கு இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த 6 ஆண்டுகளுக்கு இக்கல்லூரியை தேர்வு மையமாக மாற்ற வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவாக, நம் தேடலில் உ.பி, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ் தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேடாக காப்பி அடிப்பதாக வைரலாகும் காணொலி தவறானது உண்மையில் அது உத்திர பிரதேசத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி தேர்வின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக News Meter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.