விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

குரு பெயர்ச்சி விழா

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிருஹன் நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவில். இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 300-வது சிவன் கோவில் ஆகும். அதனால்தான் இந்த ஊரின் பெயரும் முன்னூர் என்று அழைக்கப்படுகிறது. முன்னூருக்கு வந்தால் முன்னேற்றம் உண்டு என்பது வாக்காக உள்ளது. பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், 12 வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பிரவேசிப்பார். அந்த வகையில், நடப்பு பராபவ வருடத்தில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, இன்று (26.05.2026) பகல் 11:00 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்கு வரும் காலகட்டத்தில், பொதுவாக அனைத்து ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடங்களின் அடிப்படையில் பலாபலன்களின் அளவு மாறுபடும் என்றும் கணித்துள்ளனர்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. குரு பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.இந்த மங்களகரமான நிகழ்வில், விழுப்புரம் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஹோமங்களில் பங்கேற்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

ஆடவல்லீஸ்வரர்

ஆடவல்லீஸ்வரர் இந்த கோவிலில் தெற்கு திசையை நோக்கி சுயம்பு ரூபமாக லிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். இதற்கான காரணம் பசு, புற்றுகளிலே பால் சுரந்து, அந்த புற்றுகளில் இருந்து சிவபெருமான் தோன்றியதாக புராணத்தில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்பதை குறிப்பிடும் கல்வெட்டுகள் உள்ளது.

இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு, பார்வதி சிவனுடன் நடனமாடிய காட்சி கிடைக்கப்பெற்றதை அடுத்து இங்குள்ள சிவனுக்கு ஆடவல்லீஸ்வரர் என பெயர் வந்துள்ளது, இந்த இடம் தென் கயிலாயம் என்றும் பூஜிக்கப்படுகின்றது.

கல்வெட்டுக் குறிப்பு

கி.மு. 1700-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 44 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆடவல்லீஸ்வரர், அம்பாள் ப்ருஹன்நாயகி தவிர ஆறுமுகங்களுடன் அருளும் சுப்பிரமணிய சுவாமியும் முக்கியமானவர். இவர் நல்லியக்கோடான் மன்னனுக்கு போரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் பிரதோஷங்கள், சங்கடஹர சதுர்த்தி, மகா சிவராத்திரி, கிருத்திகை வழிபாடு என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.