இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டையால் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மோதலை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது சண்டை:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

ஆனால், இஸ்ரேல், ரஷிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மோதலை நிறுத்தி கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.

காஷ்மீருக்கு ஹனிமூன் போக ரெடியா!

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, மூடப்பட்ட விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர், சண்டிகர், அமிர்தசரஸ், ஜெய்சால்மர், ஜாம்நகர், ஜோத்பூர், அதம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், ஹல்வாரா, ஹிண்டன், ஜம்மு, காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நாலியா, பாட்டியல், பாட்டியா, (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, தோயிஸ், உத்தரலை ஆகிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்:

இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல முக்கிய விமான நிறுவனங்களும் இந்த விமான நிலையங்களில் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்களுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விமான நிறுவனங்களை பயணிகள் நேரடியாக தொடர்பு கொண்டு, விமான சேவை தொடர்பான தகவல்களை பெற்று கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இந்தியா தனது வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மூடியது.