கோவையில் மழை-காற்றால் பாதிப்பு: மரங்கள் சரிந்து போக்குவரத்து தடம் புரண்டது

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைக்கு அண்மைய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை வெயில் தீவிரமாக இருந்தாலும், மதியத்திற்கு பிறகு வானிலை திடீரென மாறி மேகமூட்டம் நிலவியது.

மாலை நேரத்தில் துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை, இடையர்பாளையம், கணுவாய், சோமயனூர், திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் தாக்கத்தால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து, மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் மழைநீர் வடிகால் வசதி போதாமையால் நீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனுடன், துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் பலத்த காற்றின் காரணமாக மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் பள்ளி சுற்றுச்சுவர் சேதமடைந்ததுடன், மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் பறந்து கீழே விழுந்தன. மேலும், மரம் சாலையை மறித்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மழை நின்றதும் மாநகராட்சி ஊழியர்கள் இரவு நேரத்தில் இயந்திரங்களின் உதவியுடன் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அதேவேளை, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.