விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னூர் கிராமத்தில், சோழர் காலக் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்ட அருள்மிகு பிரஹன்நாயகி உடனுறை ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க முன்னூர் கிராமத்தில் அமைந்துபுதிய அருள்மிகு பிரஹன்நாயகி உடனுறை ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. சோழர் காலத்து கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் முன்னூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், சிதிலமடைந்த நிலையில் இருந்ததையடுத்து, தொல்லியல் துறை மற்றும் ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இங்குள்ள நடராஜர் (ஆடவல்லீஸ்வரர்) சிலை மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. நிலம், நீர், நெருப்பு என பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கிய கட்டிடக்கலை அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பு. ஊர் நிர்வாகம் மற்றும் தானம் வழங்கியது குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் இக்கோவில் சுவர்களில் இன்றும் காணப்படுகின்றன.

திண்டிவனம் நகரில் அமைந்திருந்த கிடங்கில் என்னும் கோட்டையிலிருந்து ஓய்மா நாட்டினை ஆண்ட ஓவியர் குடியில் பிறந்த வள்ளலான மன்னன் நல்லியக்கோடனுக்கு போரில் வெற்றி பெற அருள்பாலித்த ஸ்ரீ ஆறுமுகப் பெருமான் அருள்பாலிக்கும் ஸ்தலமும் முன்னூர் திருத்தலமாகும். சோழ வம்சத்தை அரசாண்ட திருநீற்றுச் சோழன் என்ற பட்டப் பெயர் பெற்ற மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனின் சிவபக்தியில் மகிழ்ந்த ஈசன் இம்மன்னனுக்கு தம் தேவியோடு ஆனந்தத் திருநடனக் காட்சி தந்து அருள்பாலித்த தலம் இத்தலம் என்றும் போற்றப்படுகின்றது. இதனால் இத்தல ஈசனுக்கு ஆடவல்லீஸ்வரர், ஆடவல்ல நாயனார் என்ற திருநாமங்கள் ஏற்பட்டுள்ளன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமைந்ததுடன் பஞ்சபூதங்களும், சித்த மஹா புருஷர்களும், எண்ணற்ற மகான்களும், மன்னர் பெருமக்களும் வழிபட்ட இந்த ஆலயத்தில் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னர் 19-6-1978-ல் காஞ்சி மகான் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி சுவாமி அவர்களின் பரிபூரண அனுக்ரஹத்தோடு குடமுழுக்கு நடைபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் தற்போது "ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் சுவாமி" திருவருள் துணை கொண்டு ஆலயத்தினை புனராவர்த்தனம் (திருப்பணிகள்) செய்வித்து புதியதாக இராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்கள் அமைத்து பஞ்ச வர்ணங்கள் தீட்டி சிவ வேதியர்களால் சிவாகம முறைப்படி ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் சுவாமிக்கு உத்தமத்தில் உத்தமம் (உத்தம பக்ஷம்) 33 யாக குண்டங்களும், ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகைக்கு (நவாக்னி) 9 யாக குண்டங்களும் புதிய 105 அடி இராஜகோபுரம் மற்றும் 55 அடி இதர கோபுரங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் இந்த கோவிலின் முக்கிய சிறப்பு என்னவென்றால் உலகமுழுவதும் உள்ள சிவன்கோவில்களில் தெற்கு வாசல் கொண்ட இரண்டாவது கோவிலாக இந்த முன்னூர் ஆடவல்லீர்ஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

இந்த விழாவையொட்டி முன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.