கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 3,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே கேரளாவில்தான் அதன் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, டெல்லியில் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது.

உலகை மிரட்டிய கொரோனா பரவல்:

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இங்கே போவதை தவிருங்கள்!

கடந்த மே 26ஆம் தேதி வரை, கொரோனாவால் 1,010 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய (மே 30) நிலவரப்படி 2,710 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். குஜராத்தில் 223 பேருக்கும் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 148 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் முறையே 148 மற்றும் 116 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.

எந்த மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது?

ராஜஸ்தானில் 51 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 42 பேருக்கும், புதுச்சேரியில் 25 பேருக்கும், ஹரியானாவில் 20 பேருக்கும், ஆந்திராவில் 16 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 10 பேருக்கும், கோவாவில் ஏழு பேருக்கும், ஒடிசா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர் ஆகிய இடங்களில் தலா மூன்று பேருக்கும், மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார், சிக்கிம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பீகாருக்கான அதிகாரப்பூர்வ தரவு இன்னும் கிடைக்கவில்லை.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியா முழுவதும் குறைந்தது ஏழு பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இறந்த ஒருவருக்கும் மற்றும் டெல்லியில் இறந்த ஒருவருக்கும் கொரோனா உடன் பிற கடுமையான நோய்களும் இருந்துள்ளன.

இருப்பினும், மற்றவர்கள் தொற்று காரணமாக இறந்தார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பஞ்சாபில் இறந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மூத்த குடிமக்கள்.