மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கை கொடுத்து, கால் பிடித்து விட்ட பெண் காவலர் உதவிய நிகழ்வு நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பாராட்டுக்களை பெற்று வரும் காவலர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு தினம் தோறும் மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க மனுக்களோடு வருவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண் நடக்க முடியாமல் சுருண்டு விழுந்தார். அதை பார்த்து ஓடிச் சென்று தாங்கி பிடித்து தூக்கிச் சென்று அமர வைத்து உதவிய ஆயுதப்படை பெண் காவலரின் செயலைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஓடோடிச் சென்று உதவிய பெண் காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால், ஒரு கை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி கால் நடக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தான் நடப்பதற்கு ஏதுவாக பிரத்தியேக காலனி (ஷூ) வாங்குவதற்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு யார் உதவியுமின்றி தனியாக வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக வாயிலில் படி ஏறும்போது கால் நரம்பு பிடித்த இழுத்ததால் நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சந்தியா என்ற ஆயுதப்படை பெண்காவலர் ஓடோடிச் சென்று அந்தப் பெண்மணியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார். எதைப் பற்றியும் யோசிக்காமல் கால்களைப் பிடித்து நீவி விட்டார். அங்கிருந்து தூக்கிச் சென்று நாற்காலியில் அமர வைத்து காலை பிடித்து முதலுதவி செய்தார்.

மருத்துவமனையில் அனுமதி

அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் முதலுதவி செய்தார். இந்நிலையில் பைரவியால் நடக்க முடியாததால் போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பைரவியை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கீழே விழுவதை பார்த்து சற்றும் தாமதிக்காமல், ஓடிச்சென்று தாங்கி பிடித்து காலைக்கடன்களை பிடித்து அமுக்கிவிட்டு, முதலுதவி செய்த காவலர் சந்தியாவின் பணி அனைவரின் பாராட்டை பெற்றது.