தெலங்கானாவில் மனைவி மீது ஏற்பட்ட தீராத சந்தேகத்தால் கணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் நகரில் தான் இத்தகைய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி கூட்டுறவு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இருவருக்குமிடையே சமீபகாலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதற்கு காரணம், அந்த கணவருக்கு தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகி இருக்கும் என்றும், அதனை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டார் எனவும் சந்தேகம் நிலவி வந்துள்ளது. இதனைக் கேட்டு கோபம் கொண்ட மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர், வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டால் மனைவியை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த மனைவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அமீன்பூர் காவல் நிலையத்திற்கு புகாரளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்றொரு கொடூர சம்பவம்

ஜார்க்கண்ட் மாநிலம் போகேரோ மாவட்டத்தில் தனது குழந்தைகள் முன்னிலையில் மனைவியை கணவர் சுத்தியலால் கொடூரமாக அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூபேஷ் யாதவ் என்ற 30 வயது நபர்,தனது மனைவி ஜாலோ தேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 3 குழந்தைகள் முன்னிலையிலும் இத்தகைய கொடூர கொலை நிகழ்ந்துள்ளது. குழந்தைகள் கதறி அழுத சத்தம் கேட்டு ரூபேஷின் தாயார் அருகில் வசித்து வந்த நிலையில் இவர்களின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதேபோல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புனேவில் தனது மனைவிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கணவன் அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளடு. இந்த கொலை முன்பே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீர் பஞ்சாப்ராவ் ஜாதவ் என்பவர் த்ரிஷ்யம் படத்தைப் பார்த்து இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அவரே கொலை செய்து எரித்து விட்டு பின்னர் தனது மனைவி காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார். ஆனால் சிசிடிவியில் கடைசியாக மனைவி அஞ்சலி சமீருடன் சென்றது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்த நிலையில் மாட்டிக் கொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.